பா.ஜ.க. பெற்ற தேர்தல் நன்கொடை! - அறிக்கை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

பா.ஜ.க. பெற்ற தேர்தல் நன்கொடை! - அறிக்கை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

பா.ஜ.க. கடந்த 2022-23 நிதியாண்டில் மட்டும் ரூ.2360.84 கோடி நன்கொடை பெற்றிருப்பது தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு தங்களின் வரவு, செலவு கணக்கை ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். ரூ.20,000-க்கு மேல் நன்கொடை அளித்தவர்களின் பெயர் பட்டியலை பான் எண்ணுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்படி தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2022-23ஆம் ஆண்டில் பா.ஜ.க.வின் வருவாய் ரூ.2,360.84 கோடி. இதில் ரூ.1,361.68 கோடியை பா.ஜ.க. செலவு செய்துள்ளது. இதில் ரூ.1,092.15 கோடியை தேர்தலுக்கு செலவிடப்பட்டுள்ள நிலையில், ரூ.432.14 கோடி விளம்பரத்துக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க. வருவாயின் பெரும் பகுதி தேர்தல் பத்திரங்களாக வந்துள்ளன. தானாக முன்வந்து அளிக்கப்பட்ட நன்கொடை ரூ.2,120.06 கோடியில் 61 சதவீதம் (ரூ.1,294.14 கோடி) தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளன.

கடந்த 2022-2023ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.2,800.36 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளது. இந்தாண்டில் மொத்தம் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் 46 சதவீதம் பா.ஜ.க. பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் 2022-23ஆம் ஆண்டில் ரூ.452.37 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆனால் அதன் செலவு ரூ. 467.13 கோடி. ராகுல் நடைப்பயணத்துக்கு காங்கிரஸ் ரூ.71.83கோடி செலவு செய்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com