நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்

தேர்தல் தோல்வி: வி.கே. பாண்டியனை விட்டுக் கொடுக்காத நவீன் பட்நாயக்!

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்துள்ள தோல்வியை மனதார ஏற்றுக்கொள்கிறேன். மாநில மக்களுக்கு முடிந்தவரை சிறந்த சேவைகளை நாங்கள் வழங்கினோம். இருந்தும் தோல்வி அடைந்துள்ளோம். இந்த தோல்வியை அடுத்து, வி.கே.பாண்டியன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவை துரதிருஷ்டவசமானவை. அவர் கட்சியில் சேர்ந்து எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. இந்த தேர்தலில் அவர் எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை. அவர், மாநில மக்களின் சுகாதாரம், கல்வி, விளையாட்டு, கோவில் திருப்பணிகள் போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

எனது வாரிசு யார் என்பது குறித்த கேள்வி எழும்போதெல்லாம் நான் ஒருவிஷயத்தை தெளிவாகச் சொன்னேன். எனது வாரிசு பாண்டியன் அல்ல. எனது வாரிசை ஒடிசா மக்கள் தீர்மானிப்பார்கள். இதை நான் மீண்டும் சொல்கிறேன். வி.கே.பாண்டியன் ஒரு அதிகாரியாக கடந்த 10 ஆண்டுகளாக வெவ்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். பணிகளை நேர்மையாகச் செய்யக் கூடியவர் அவர். அதற்காக அவர் நினைவுகூரப்பட வேண்டும்.” என்றவர் தன்னுடைய உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், ஒடிசா மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

147 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசாவில் 78 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. நவீன் பட்நாயக் தலைமையிலான கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், சி.பி.எம். ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒடிசாவில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 20 இடங்களையும் காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன. பி.ஜே.டி. ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com