“வாக்கு திருட்டை கண்டுபிடிப்பதில் தேர்தல் ஆணையத்துக்குள் இருந்து எங்களுக்கு உதவி கிடைக்கத் தொடங்கிவிட்டது. அங்கிருப்பவர்களே எங்களுக்கு தகவல்களை வழங்கத் தொடங்கிவிட்டனர்.” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி கடந்த மாதம் 7ஆம் தேதி டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களில் பாஜக வாக்குகளை திருடியதாகவும், அதற்க தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது பெரும் விவாதத்தை கிளப்பியது.
அதன்பிறகு பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து ராகுல் காந்தி பேரணி மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி விரைவில் வாக்கு திருட்டு குறித்த புதிய ஹைட்ரஜன் குண்டை போடும். அதன்பிறகு பிரதமர் மோடியால் நாட்டு மக்களிடம் முகத்தை கூட காண்பிக்க முடியாது என்று கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக தான் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் ராகுல் காந்தி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது வாக்கு திருட்டு தொடர்பான தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் சில விஷயங்களை வீடியோ கான்பரன்சிங் மூலமாக பத்திரிகையாளர்களுக்கு காண்பித்தபடி ராகுல் காந்தி கூறியதாவது:
“ஞானேஷ் குமார் வாக்குத் திருடர்களைப் பாதுகாக்கிறார். நான் இன்று பகிர்ந்துள்ள ஆதாரத்தில் எந்த குழப்பமும் இல்லை. ஞானேஷ் குமார் மீது நான் ஏன் இவ்வளவு நேரடியான குற்றச்சாட்டை முன்வைக்கிறேன் என்பதை விளக்குகிறேன்.
வாக்காளர்களை நீக்க முயற்சித்தது தொடர்பாக கர்நாடக சிஐடி தரப்பில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு 18 முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் எளிய தகவல்கள் மட்டுமே கோரப்பட்டது. ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட ஐபி முகவரி, விண்ணப்பம் பெறுவதற்கு அளிக்கப்பட்ட ஓடிபி தடங்கள் உள்ளிட்டவை மட்டுமே கோரப்பட்டது, ஆனால் பதில் வழங்கவில்லை. இதனைச் செய்தவர்களை ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
ஜனநாயக அமைப்பில் பங்கேற்பது தான் எனது வேலை. பாதுகாப்பது எனது வேலை அல்ல. தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களின் வேலை அது. அவர்கள் பாதுகாக்காததால், அந்த வேலையை நான் செய்கிறேன். அனைத்து இடங்களிலும் வாக்குத் திருட்டு நடந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தேர்தல் ஆணையத்துக்குள் இருந்து எங்களுக்கு உதவி கிடைக்கத் தொடங்கிவிட்டது. தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் எங்களுக்கு தகவல்களை வழங்கத் தொடங்கிவிட்டனர். இது நிற்கப் போவதில்லை.
இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் மக்களைப் பாதுகாப்பதை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நிறுத்த வேண்டும். நாங்கள் உங்களுக்கு 100% குண்டு துளைக்காத ஆதாரத்தை இங்கே வழங்கியுள்ளோம். இந்த தொலைபேசிகளின் தரவு, இந்த ஓடிபி-களை ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.” எனத் தெரிவித்தார்.