
அரியானா வாக்களர் பட்டியலில் 8 வாக்களர்களில் ஒரு வாக்காளர் போலியானவர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்கு திருட்டு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரியானாவில் நடந்த வாக்கு திருட்டு குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது.
“அரியானாவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெறுவதை தடுத்து, தோற்கடிக்க சதி நடந்துள்ளது. பல கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறும் என கூறியிருந்தன. ஆனால் முடிவு வேறாக இருந்தது. வரலாற்றில் முதல்முறையாக தபால் வாக்குகளுக்கும், இவிஎம்வாக்குகளுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது.
தேர்தல் ஆணையம் வாக்கு மோசடி செய்பவர்களையும் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குபவர்களையும் பாதுகாக்கிறது.
வாக்கு திருட்டு தொகுதி அளவில் மட்டுமில்லாமல் மாநில அளவில் தேசிய அளவில் நடக்கின்றன.
அரியானாவில் சுமார் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. அதில் 5.21 லட்சம் போலி வாக்குகளும், 93,174 செல்லாத வாக்குகளும் அடங்கும். அரியானா வாக்காளர் பட்டியலில் உள்ள எட்டு வாக்காளர்களில் ஒருவர் போலியானவர்.
பிரேசிலைச் சேர்ந்த மாடல் ஒருவரின் புகைப்படத்துடன் பல பெயர்களில் 10 வாக்குச்சாவடிகளில் 22 வாக்குகள் பதிவாகியுள்ளன.
அரியானாவில் ஒரே மாதிரியான புகைப்படங்களைக் கொண்ட 1,24,177 வாக்காளர்கள் உள்ளனர். இரு வாக்குச் சாவடிகளில் ஒரே படத்துடன் 223 பேர் வாக்குப் பதிவு நடந்துள்ளது. இப்படி நிறைய உதாரணங்களைக் காட்ட முடியும்.
தேர்தல் ஆணையம் நியாயமான தேர்தலை விரும்பவில்லை. பாஜக என்ன செய்கிறது என்பதற்கு இது முற்றிலும் தெளிவான சான்றாகும்.” என்றவர் தொடர்ந்து ஆவணங்களை வெளியிட்டுப் பேசிவருகிறார்.