“எதற்கெடுத்தாலும் மோடி நேருவை குறை கூறுகிறார்...”

பிரியங்கா எம்.பி.
பிரியங்கா எம்.பி.
Published on

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு வந்தே மாதரம் பாடலை பாஜக கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதைக் கொண்டாடும் வகையில் மக்களவையில் இன்று வந்தே மாதரம் குறித்த விவாதத்தைத் தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

மோடியின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி மக்களவையில் உரையாற்றுகையில், "வந்தே மாதரம் என்று நாம் குறிப்பிடும்போது, சுதந்திரப் போராட்டத்தின் முழு வரலாற்றையும் அதன் வலிமை, ஒழுக்கத்தையும் நினைவு கூர்கிறோம். இன்றைய விவாதம் எனக்கு விசித்திரமாகத் தெரிகிறது. இந்தப் பாடல் நாட்டின் ஆன்மாவின் ஒரு பகுதியாக மாறிவிட்ட நிலையில் இன்று இந்த விவாதத்திற்கான தேவை என்ன? நோக்கம் என்ன?

பிரதமர் மோடி இன்று அருமையான ஒரு உரையை ஆற்றினார். அது நீண்டதாக இருந்தாலும் நல்ல உரை. ஆனால் ஒரேயொரு பிரச்னை. அவர் கடந்த காலத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார். அவரது தரவுகள் பலவீனமாக இருக்கின்றன. நாட்டின் வளர்ச்சி குறித்த எதிர்கால இலக்குகள் பாஜகவிடம் இல்லை. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வந்தே மாதரம் உயிர்ப்புடன் இருக்கிறது. அதற்கு எந்த விவாதமும் தேவையில்லை.

மேற்குவங்க தேர்தல் வருவதனால்தான் வந்தே மாதரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. பிரதமர் மோடி பேச்சில் உண்மையில்லை.

நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே வந்தே மாதரம் விவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். கடந்த காலம் பற்றி பேசியே பாஜக அரசியல் செய்கிறது. நேரு குறித்து குறை கூறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் மோடி. நேரு 12 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அதே ஆண்டுகள்தான் மோடி பிரதமர் பதவியில் உள்ளார். ஆனால் இன்னும் நேருவை குறைகூறுகிறார் மோடி. இஸ்ரோ, எய்ம்ஸ் என பல நிறுவனங்களை உருவாக்கியவர் நேருதான். அதையெல்லாம் இல்லை என்று மறுக்க முடியுமா?

உங்களுக்கு அரசியல் முக்கியம், தேர்தல் முக்கியம், எங்களுக்கு இந்த நாடுதான் முக்கியம். இந்த நாட்டுக்காக நாங்கள் இருக்கிறோம். நாங்கள் எவ்வளவு தேர்தல்களில் தோற்றோம் என்பது முக்கியமல்ல, நாங்கள் 100 தேர்தல்களில் தோற்றாலும் இங்கு அமர்ந்து உங்களுடனும் உங்களது கொள்கைகளுடனும் சண்டையிட்டு போராடிக் கொண்டிருப்போம். இந்த நாட்டுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். எங்களை நீங்கள் தடுத்து நிறுத்த முடியாத. நாங்கள் மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறோம். இந்த நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கானத் தீர்வைக் கண்டறிய இந்த அரசு முயற்சி செய்வதில்லை" என்று பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com