டெல்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (வயது 92) உடல்நலக் குறைவால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார்.
மன்மோகன் சிங் மறைவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மன்மோகன் சிங் உடல், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
மன் மோகன் சிங் உடலுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
டெல்லியில் மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை நிறைவேற்றித் தந்தவர் மன்மோகன் சிங். அவரது மறைவு ஒட்டுமொத்த நாட்டிற்கே பேரிழப்பு. அவர் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தார்.
கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்தவர் மன்மோகன் சிங். 100 நாள் வேலைத் திட்டம் எனும் புரட்சிகரமான திட்டத்தை அறிமுகம் செய்தவர். தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர்.” என்றார்.