வாக்கு எண்ணும் மையங்களில் கியூஆர் அடையாள அட்டை- தேர்தல் ஆணையம் அதிரடி

election comission of india
தேர்தல் ஆணையம்
Published on

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த QR குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.

இதுகுறித்துஆணையத்தின் துணை இயக்குநர் ப. பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

” வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவதைத் தவிர்க்க, இந்தியத் தேர்தல் ஆணையம் ECINET-இல் QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள் மற்றும் 5 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 04, 2026 அன்று தொடங்குகிறது. இதிலிருந்து இம்முறையானது அமல்படுத்தப்பட்டு, இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான அனைத்து பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கும் இந்த முறை நீட்டிக்கப்படும்..

கடந்த ஓராண்டில் இந்தியத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள 30-க்கும் மேற்பட்ட முன்முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்த முக்கியமான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தரப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகளும் அடங்கும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் அடையாளத்தை சரிபார்க்க மூன்று அடுக்கு பாதுகாப்பு வழிமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் அடுக்குகளில், தேர்தல் நடத்தும் அலுவலரால் (RO) வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள் நேரடியாகச் சரிபார்க்கப்படும். வாக்கு எண்ணிக்கை அறைக்கு அருகிலுள்ள உள் பாதுகாப்பு வளையத்தில், QR குறியீடு சோதனை செய்யப்பட்டு வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்.

புதிய QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோருக்குப் பொருந்தும்.

அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் வசதிக்காக ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வாக்கு எண்ணிக்கை அறைகளுக்கு அருகில் ஒரு ஊடக மையம் அமைக்கப்படும்.

ஊடகவியலாளர்களுக்கான அனுமதி, ஆணையத்தின் நடைமுறையில் உள்ள அறிவுறுத்தல்களின்படி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதங்களின் அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த நடைமுறையைத் திறம்பட செயல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், தடையற்ற மற்றும் பாதுகாப்பான அணுகல் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக, நிர்ணயிக்கப்பட்ட சோதனைச் சாவடிகளில் பயிற்சி பெற்ற பணியாளர்களை பணியமர்த்துவதும் அடங்கும்..

வாக்கு எண்ணிக்கைச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதற்கு, இந்த அறிவுறுத்தல்களைக் கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அனைத்து தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com