இவர்தான் நிஜ விண்வெளி நாயகன்!

Rakesh sharma
ராகேஷ் சர்மா
Published on

நாடெங்கிலும் உள்ள அறிவியல் ஆர்வலர்கள் மத்தியில் இப்போது சுபான்ஷு சுக்லாவைப் பற்றித்தான் பேச்சாக இருக்கிறது. நாசா மற்றும் இஸ்ரோ அமைப்புகள் இணைந்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களை ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக 550 கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்துள்ளது. ஆனால் இவருக்கு முன்னால் ஒரு ரூபாய்கூட செலவில்லாமல் முழுக்க முழுக்க அப்போதைய சோவியத் அரசின் செலவில் விண்வெளிக்கு சென்றுவந்த ராகேஷ் சர்மாவைப் பற்றி இன்று பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த சாதனைக்கு காரணமாக இருந்தவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார், இந்திரா காந்தியின் படுகொலை, போபால் விஷவாயு சம்பவம் என்று இந்திய வரலாற்றில் மறக்க முடியாத பல சம்பவங்கள் நடந்த 1984-ம் ஆண்டுதான் ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணம் என்ற சாதனையும் நடந்தது.

தனது ஆட்சிக் காலத்துக்குள் இந்தியர் ஒருவரை எப்படியாவது விண்வெளிக்கு அனுப்பியாக வேண்டும் என்பது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. 1980-ம் ஆண்டில் இருந்தே இதற்காக தீவிர முயற்சிகளை எடுத்தார் இந்திரா காந்தி. ஒரு கட்டத்தில் இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள இந்தியாவின் நீண்டநாள் தோழர்களான சோவியத் யூனியனின் உதவியை நாடினார். அவர்களும் இந்ந்தியாவுக்கு எந்த செலவையும் வைக்காமல் நம் நாட்டைச் சேர்ந்த ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டனர்.

சோவியத் யூனியன் அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து இந்தியாவின் சார்பில் முதன்முதலாக விண்வெளிக்கு செல்லும் மனிதரை தேர்ந்தெடுக்கும் முயற்சி 1982-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக அதிவேகமாகச் செல்லும் போர் விமானங்களை ஓட்டக்கூடிய 50 விமானிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்தது.

பெங்களூருவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் வைத்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் 50 வீரர்களுக்கும் பலவிதமான சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் முக்கியமானதாக 24 மணி நேரமும் செயற்கை வெளிச்சம் இருந்துகொண்டே இருக்கும் அறைக்குள் 3 நாட்கள் ஒவ்வொரு வீரரும் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் அவர்கள் மனவலிமை மிக்கவர்களாக இருக்கிறார்களா என்று பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. இப்படி பல்வேறு கட்ட சோதனைக்கு பிறகு அந்த 50 வீரர்களில் இருந்து ராகேஷ் ஷர்மா, ரவிஷ் மல்ஹோத்ரா ஆகிய 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் இருவரில் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பலாம் என்று சிபாரிசு செய்து அடுத்தகட்ட பயிற்சிக்காக ரஷ்யாவுக்கு அனுப்பிவைத்தது இந்திய அரசு.

ராகேஷ் சர்மா
ராகேஷ் சர்மா

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 70 கிலோமீட்டர் தள்ளியுள்ள பயிற்சி மையத்தில் இந்தியாவின் இரு வீரர்களுக்கும் அடுத்தகட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக இந்த விண்வெளிப் பயணத்தில் உடன் செல்லும் மற்ற ரஷ்ய வீரர்களுடன் பேசுவதற்காக அந்நாட்டு மொழி கற்றுக்கொடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ரஷ்ய மொழியை கற்றுக்கொள்வதற்காக மட்டும் ராகேஷ் ஷர்மாவும், அவரது நண்பரும் ஒவ்வொரு நாளும் 7 மணி நேரத்தை செலவழிக்க வேண்டியிருந்தது. இந்த பயிற்சிக்கு பிறகு, உணவு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சிகளின் இறுதியில் இருவரில் சிறப்பாக செயல்பட்ட ராகேஷ் ஷர்மா, இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1984-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி விண்ணில் பாய்ந்து சென்ற சோயுஸ் டி-11 (Soyuz T-11) ரா ராக்கெட்டில் யூரி மலிஷே, கென்னடி ஸ்டிரெகாலோவ் ஆகிய 2 சோவியத் விண்வெளி வீரர்களுடன் இணைந்து விண்வெளிக்கு பறந்து சென்றார் ராகேஷ் ஷர்மா. ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து 7 நாட்கள் 21 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியுள்ளார் ராகேஷ் சர்மா. அவர் விண்வெளியில் தங்கியிருந்த அத்தனை மணித்துளிகளும், இந்தியர்களுக்கு பெரும் கொண்டாட்டமாய் அமைந்ததை மறக்க முடியாது.

இந்த விண்வெளிப் பயணத்தைப் பற்றி நினைவுகூறும் ராகேஷ் ஷர்மா, “விண்வெளிக்குச் செல்வதற்கான பயிற்சியின்போது அது சவால் மிகுந்ததாக இருக்கும் என்று என்னிடம் பலரும் கூறியிருந்தனர். ஆனால் எனக்கு அத்தனை கடினமாக இருக்கவில்லை” என்கிறார்.

இந்த விண்வெளிப் பயணத்தின்போது தனது குடும்பத்தினருடனும், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடனும் காணொலியில் பேசியுள்ளார் ராகேஷ் ஷர்மா. அப்போது இந்திரா காந்தி, “விண்ணில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி இருக்கிறது?” என்று ராகேஷ் ஷர்மாவிடம் கேட்டுள்ளார். அதற்கு ராகேஷ் ஷர்மா ”மற்ற நாடுகளை விட மிகவும் அழகாக இருக்கிறது” என்று கூறியது பற்றித்தான் இந்தியாவில் அப்போது பலரும் பேசிக்கொண்டனர்.

இதுபற்றி கூறும் ராகேஷ் ஷர்மா, “நான் அன்றைய தினம் பிரதமரிடம் இந்த வார்த்தைகளை அலங்கரத்துக்காக சொல்லவில்லை. நிஜமாகவே இந்தியாவின் புவியியல் அமைப்பானது மற்ற நாடுகளை விடவும் மிக அழகாக இருந்தது. 3 புறமும் கடல்கள், பசுமையான வயல்வெளிகள், நீண்ட ஆற்றுப்படுகைகள், பனிமலைகள் என்று இந்தியாவில் இல்லாத விஷயங்களே இல்லை” என்கிறார்.

விண்வெளிக்கு செல்ல இருக்கும் சுபான்ஷு சுக்லா
விண்வெளிக்கு செல்ல இருக்கும் சுபான்ஷு சுக்லா

முதல் இந்தியனாக விண்வெளிக்குச் சென்ற ராகேஷ் சர்மாவுக்கு இப்போது வயது 76. பாலிவுட்டில் இயக்குநராக இருக்கும் தனது மகன் கபில் ச்சர்மாவின் கவனிப்பில் இப்போது வருகிறார். விண்வெளிக்கு செல்ல விரும்பும் வீரர்களுக்கு தனது அனுபவங்களை சொல்லிக்கொடுத்து, அவர்களை பக்குவப்படுத்தும் வேலையை அவ்வப்போது பார்த்துவருகிறார். மீதி நேரங்களில் புத்தகங்களைப் படிப்பது, கோல்ஃப் ஆடுவது என்று என அமைதியான முறையில் வாழ்க்கையை நடத்துகிறார் இந்தியாவின் நிஜ விண்வெளி நாயகனான ராகேஷ் சர்மா.

logo
Andhimazhai
www.andhimazhai.com