குடமுழுக்கு விழா... தமிழிசைக்கு அனுமதி, செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தம்!

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை
Published on

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை பகுதியில் முருகன் கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்த கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றன.

இந்த நிலையில், வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதன்படி, குடமுழுக்கு முடிந்த பிறகு மூலவர் விமானத்தில் நன்னீராட்டு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் தெலங்கானா முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்தத் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனை அனுமதித்தனர்.

அதன்பிறகு வந்த ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகையை மேலே இடமில்லை என்று கூறி அங்கு செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் கோயில் வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பின்னர் செல்வப்பெருந்தகை மூலவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டார். மேலும், புனித நீரை ஊற்றுவதற்கு முன்பாக கொடியைக் கூட சட்டமன்ற உறுப்பினரிடம் தராமல் அறநிலையத் துறை அதிகாரிகளே அதனை அசைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “குடமுழக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. அதற்கு எனது வாழ்த்துக்கள். திருச்செந்தூரில் குடமுழக்கு விழா சிறப்பாக நடைபெற்றதோடு, அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயலாற்றினார். ஆனால், இங்கு அறநிலையத் துறை அதிகாரிகள் மிகவும் மெத்தனப்போக்குடன் செயல்பட்டுள்ளனர். யார் யாரைக் கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. தமிழிசை சவுந்தரராஜனை அனுமதித்துவிட்டு என்னை ஏன் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை.

2000 ஆண்டுகளாக இந்தப் பிரச்னை இருந்து வருகிறது. ஒரே இரவில் அதனை தீர்த்துவிட முடியாது. அதிகாரிகள் தாங்களே கொடி அடைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். நாங்கள் மக்களோடு மக்களாக நின்று பார்த்து வந்தோம். ஏனெனில் நாம் ஏதாவது சொல்லப்போக ஒரு நல்லாட்சிக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது.

24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருக்கும் முதல்வரின் நற்பெயருக்கோ அல்லது பக்தி இயக்கத்தை விட சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கோ களங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக மக்களோடு மக்களாக நின்றேன். இறைவனை என்னால் பார்க்க முடியவில்லை, இருந்தாலும் எல்லோரும் பார்த்துவிட்டு வாருங்கள் என்று கூறி செல்கிறேன். அதிகாரிகள் தங்களை அதிகாரிகளாக உணர்ந்துகொள்ள வேண்டும். அதுதான் இங்கு பிரச்னையாக உள்ளது. என்ன இருந்தாலும் பக்தர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்” என்று தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com