முடிவுக்கு வந்த பாசக் காட்சிகள்; இராமதாஸ் குடும்ப சண்டைக் காட்சிகள் ஆரம்பம்!

Ramadass- Anbumani
இராமதாசு- அன்புமணி
Published on

பா.ம.க.வுக்குள் நடைபெற்றுவரும் கட்சித் தலைமைக் குழப்படியில், ஒருவழியாக மூடுண்ட திரை விலகி, தெளிவுபடத் தொடங்கியுள்ளது.

சில ஆண்டுகளாகவே பா.ம.க.வின் முக்கிய முடிவுகளை எடுப்பதில், அக்கட்சியின் நிறுவனர் இராமதாசுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் கருத்துமாறுபாடு இருந்துவந்தது. ஆனால், குடும்பத்தார் புகுந்து தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சமாதானம் செய்துவைத்துவிடுவார்கள்.

ஆனாலும் இருவருக்கும் இடையே நேர்ச் சந்திப்பு குறைந்து, தொலைபேசியிலும், முக்கிய நிர்வாகிகள் மூலமாகவும் தகவல் பரிமாறிக்கொள்வதாக மாறியது. இதனால் கட்சியின் செயல்பாடுகளில் எந்த பெரிய பாதிப்பும் இல்லாமல், வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

இடையில், கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணியை கௌரவத் தலைவராக மாற்றி, அவருடைய பதவியை அன்புமணிக்குக் கொடுத்தார் இராமதாஸ். கிட்டத்தட்ட இனி கட்சி அன்புமணிதான் என்கிற இடத்துக்கு வந்துவிட்ட தருணம் அது.

இப்படியான பின்னணியில்தான் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற புதுச்சேரி பொதுக்குழுக் கூட்டத்தில், அப்பா-பிள்ளை மோதல் உச்சத்துக்குப் போனது.

மூத்த மகள் காந்திமதியின் இளைய மகன் முகுந்தனை பா.ம.க. இளைஞர் அணிக்குத் தலைவராக அறிவித்தார், இராமதாசு. அதைக் கேட்டதும் அன்புமணியின் முகத்தில் அத்தனை அதிர்வலைகள். மேடையிலேயே முணகியவர், கடுப்பாகப் பேச, உடனே பதிலுக்கு இராமதாசும் சீற்றமாகி, ”கட்சியில் நான் வைத்ததுதான் சட்டம், இதை ஏற்றுக்கொண்டால் இருக்கலாம், இல்லாவிட்டால் யாராக இருந்தாலும் யாராக இருந்தாலும் (என அழுத்தமாகச் சொல்லி) வெளியேபோய்விடலாம்.” என்றார்.

அவர் இப்படிச் சொன்னது அன்புமணியை கூடுதலாக சூடேற்றியது. மேடையிலேயே தன் கையில் இருந்த மைக்கை, மேசை மீது தூக்கிப் போட்டார். இது முழுக்க முழுக்க நேரலையில் எல்லா ஊடகங்களிலும் ஒளிபரப்பானது.

அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 10ஆம் தேதியன்று இராமதாசு வெளியிட்ட அறிவிப்பு, மீண்டும் மோதலை வெளிக்காட்டியது. கட்சிக்கு இனி தானே தலைவராக இருக்கப்போவதாகவும், அன்புமணி செயல்தலைவராக இருக்கட்டும் என்றும் அவர் அறிவித்தார்.

வழக்கம்போல குடும்பத்தார் சமாதானம் செய்துவைத்தபின்னர், மாமல்லபுரத்தில் கடந்த மே 11 அன்று பா.ம.க.வின் சித்திரைப் பெருவிழா நடைபெற்றது. அதில் தந்தையும் மகனும் ஒன்றாகக் கலந்துகொண்டனர். ஆனால் அன்புமணியின் குடும்பத்தார் குறிப்பாக சௌமியாவும் அவர்களின் பிள்ளைகளும் முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்டனர்.

அது முடிந்தபின்னர் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக ஆனது.

அன்புமணியை ஆதரித்துப் பேசிய பொருளாளர் திலகபாமாவை முதலில் நீக்கிய இராமதாசு, வரிசையாக தலைமைநிர்வாகிகள் பலரையும் நீக்குவதாக அறிவித்தபடி இருந்தார். இதனால் முன் எப்போதும் இல்லாத பதற்றம் அந்தக் கட்சிக்குள் உண்டானது. உடனே அன்புமணியின் தரப்பில், நீக்கப்பட்டவர்கள் அதே பதவிகளில் தொடர்கிறார்கள் என பதிலடியான அறிவிப்புகள் வந்தவண்ணம் இருந்தன.

ஜூன் முதல் வாரத்தில் அரசியல் இடையீட்டாளர் ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரம் தோட்டத்துக்கே சென்று இராமதாசிடம் சமாதானம் பேசிப்பார்த்தார்கள். மறுநாள் சென்னைக்கு வந்த இராமதாசிடம் பேசியும் ஒரு பலனும் இல்லை.

உச்சகட்டமாக, அன்புமணியையே தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து நீக்குவதாக அறிவித்தார், இராமதாஸ். ஆனால் நீக்கப்படவில்லை என ஜி.கே.மணி மறுத்தார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று 8ஆம் தேதி பா.ம.க. செயற்குழுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், இராமதாசின் மகள் காந்திமதி அதாவது முகுந்தனின் தாய் மேடையேற்றப்பட்டார். முதலில், முன்வரிசையில் கீழே அமர்ந்திருந்த அவரை எம்.எல்.ஏ. அருள் மேடைக்கு வருமாறு அழைத்து அவர் கொண்டுவரப்பட்டார்.

மகனுக்கும் தனக்குமான பிரச்னையில், மருமகள் சௌமியாவை வறுத்தெடுத்த இராமதாஸ், தன் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே, தன் குடும்பப் பெண்கள் அரசியலுக்குள் வரமாட்டார்கள் என உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகவும், அதைமீறி சௌமியா அரசியலுக்குள் நுழைந்ததாகவும் குறைகூறியிருந்தார்.

ஆனால், அவருடைய வழிகாட்டுதலில்தான் பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் சௌமியா பல்வேறு அரசியல் செயல்பாடுகளில் பங்கேற்றுவந்தார் என்பது உலகம் அறிந்த செய்தி. இராமதாசு இப்படிப் பேசியதால் கட்சித் தொண்டர்கள் குழப்பமும் அதிருப்தியும் அடைந்தனர்.

தந்தையும் மகனும் ஆளுக்கு ஒரு பக்கம் தாங்களே தலைமை எனக் கூறிவருவது பா.ம.க.வினரை விசனப்படுத்தியுள்ளது.

இதுவரை நடந்துவந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும், குடும்பத்துக்குள் சமாதானப்படுத்தி வந்ததில் இராமதாசின் மூத்த மகள் காந்திமதிக்கு முக்கிய பங்கு உண்டு. அவரையே நேற்றைய கூட்டத்தில் மேடைக்கு வரவைத்திருக்கிறார் என்றால், குடும்பம் என்கிற வட்டத்துக்குள் புகைந்துகொண்டிருந்த நெருப்பின் சூடு வெளியே வந்துவிட்டது என்கிறார்கள், அரசியல் ஆய்வாளர்கள்.

அதாவது, பா.ம.க. குடும்பக் கட்சி இல்லை என இராமதாசு பல பத்தாண்டு வசனம் பேசினாலும், அந்தக் கட்சியும் குடும்பம்தான் என்பது அப்பட்டமான உண்மை. அதில் வருகிற பலாபலன்களை அறுவடை செய்துகொள்வதில் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதுதான் இப்போதைய பகிரங்கப் போட்டி.

மத்திய அரசில் இடம்பெற்றிருந்த கோதாவுடன் அன்புமணியும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரின் மகள் கோதாவுடன் சௌமியாவும் பா.ம.க.வின் அடுத்த தலைமுறை முகங்களாக அறியப்பட்டுவிட்டனர். இத்துடன், அன்புமணியின் மகள்களும் தங்கள் தாய்க்காக கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்து புகழ் முகங்களாக ஆகிவிட்டனர்.

இந்த நிலையில், திரைமறைவில் கட்சிக்காக உழைத்த தங்களுக்கு என்ன என்கிற கேள்வியை காந்திமதி தந்தையிடம் அழுத்த, இராமதாசுக்கு தராசைச் சீர்தூக்கிப் பார்த்து இரண்டு தட்டுகளையும் சரிசமமாக வைக்க வேண்டிய இடத்துக்குத் தள்ளப்பட்டார். அதன் விளைவே, முகுந்தனுக்கு இளைஞர் சங்கப் பொறுப்பு!

ஆனால், இந்த களேபரத்துக்கு இடையில் அவர் பதவிவிலகுவதாக அறிவித்ததும் நினைவிருக்கலாம்.

அதையும் தாண்டிதான், அவருடைய அம்மா காந்திமதியே நேரடியாகக் களத்தில் இறங்கிவிட்டார்.

இது, மகாராஷ்டிரத்தின் தேசியவாத காங்கிரஸ் கதை போலத்தான் ஆகும் என்கிறார்கள், பா.ம.க.வை நன்கறிந்தவர்கள்.

சமூக ஊடகத்திலும் பின்னர் புத்தகமாகவும் வந்தது, இராமதாஸ் ‘கதை கேளு கதை கேளு’ தொடர். அதைப்போல, பா.ம.க.வின் கதை கேளு என தனி புத்தககமே வெளியிடலாம்போல் இருக்கிறது!

logo
Andhimazhai
www.andhimazhai.com