'கூலிக்கு மாரடிப்பது' என்கிற சொலவடைக்கு மிகச் சரியான அர்த்தம் தெரிந்துகொள்ள, சோஷியல் மீடியாக்களில் இப்படம் குறித்து அலசி, துவைத்து, கழுவி, காயப்போடும் செய்திகளை ஒரு ரவுண்டு வலம் வந்தால் போதும்.
‘இந்தியாவின் கிறிஸ்டபர் நோலன் லோகேஷ் கனகராஜ்’
‘படம் பார்க்க பத்து நாளா தூங்காம காத்திருந்தேன்’
‘ 74 வயசுலயும் ரஜினி என்னமா நடக்குறார்?’ [ என்னமா நடிக்கிறார்ன்னு எப்பத்தான் பேச ஆரம்பிப்பீங்க பாஸ்? ]
... இப்படி திரும்பின திசையெங்கும் புல்லரிப்புகள், ‘என்ன வேணும் உனக்கு எங்ககிட்ட கிடக்கு’ என்று கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால் படம் பெரும் ஏமாற்றம் என்றுதான் சொல்லவேண்டும். பல ஹாலிவுட் டைரக்டர்களுக்கு இணையாகப் பேசப்படும் லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் தன்னை முழுவதுமாக எக்ஸ்போஸ் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அவரது முதல் படமான ‘மாநகரம்’ தவிர்த்து தொடர்ந்து ஒரே டெம்ப்ளேட்டில் பயணித்து வருவதை ‘கூலி’ அப்பட்டமாய் காட்டி நிற்கிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல், பழைய பாடல்களை ஒலிக்க விட்டு சண்டைக் காட்சிகளை வைப்பது, குரூர பெண் வில்லி, மானிட உறுப்புகளை சர்வதேச பணக்காரகளுக்கு கடத்துவது, சுருக்கமாக சொன்னால் சத்தம், ரத்தம், பொணநாத்தம் என்றே பயணப்படுகிறார் லோகேஷ் கனகராஜ்.
இவ்வளவு ரத்தவெறி பாவத்தை எங்கேபோய் கழுவுவது என்று யோசித்துதான், பட ரிலீஸுக்கு முன்பு, ராமேஸ்வரம் கோவிலுக்குப் போய் 21 வகையான புனித நீராடல்களை மேற்கொண்டு வந்தாரோ ?
தமிழக மக்களிடம் அடிக்கிற டிக்கெட் கொள்ளை போதாதென்று இந்தியா முழுக்க அடிப்பதற்காக இறக்கப்பட்ட சவுபின், நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான் சூத்திரங்களெல்லாம் தவிடுபொடியாகிவிட்டது என்பதுதான் நிஜநிலவரம். அதிலும் ஒரு நாள் கூத்துக்கு 20 கோடி கூலி கொடுத்து கூட்டிவரப்பட்ட ஆமிர்கானெல்லாம் க்ளைமேக்ஸ் முடிந்த பிறகு சேர்க்கப்பட்ட தொங்குசதையாகவே தெரிகிறார்.
சரி இதெல்லாம் கிடக்கட்டும்... 1000 கோடி வசூலுக்கு ஆசைப்படும் ஏழைக் கூலிகள் கலாநிதி மாறன், லோகேஷ் கனகராஜ், ரஜினிகளின் சின்ன ஆசை நிறைவேற சாத்தியமா ? ஒரு விநியோகஸ்தரிடம் பேசினோம். ’ஊரும் வேண்டாம் பேரும் வேண்டாம் ’என்ற வேண்டுகோளுடன் பேசிய அவர், ‘ படம் பத்தி ரொம்ப கலவையான ரிப்போர்ட்தாங்க இருக்குது. கதையில புதுசா ஒண்ணுமில்ல. சத்தியராஜ், ஸ்ருதி, ரஜினி மூணு பேருமே பொணம் எரிக்கறவங்களா வர்றதால படத்துக்கு வேட்டையன் மாதிரி ‘மனித வேட்டையர்கள்’ ன்னே வச்சிருக்கலாம். அவங்க ஆசைப்பட்டதுல வசூலில் பாதிக் கிணறு தாண்டுனாலே பெரிய விஷயம்’ என்கிறார்.
அப்ப இவங்க ரெண்டாயிரம் கோடி வசூலுக்கு ஆசைப்பட்டிருக்கலாமோ?