
சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள், ஓடிக்கொண்டிருந்த ஒரு பேருந்து ஆகியவற்றுக்கு மேலே திடீரென ஒரு மெர்சிடென்ஸ் பென்ஸ் கார் பறந்துசென்றது. பின்னர் விழுந்து நொறுங்கியது. அதைப் பார்த்தவர்கள் அந்த கணத்தில் திகைத்து நின்றார்கள்.
வாயைப் பிளக்க வைக்கும் இந்த சம்பவம், ருமேனியா நாட்டில் கடந்த 3ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் மளமளவெனப் பரவிவருகிறது.
அங்குள்ள ஒராடியா நகரில்தான் மெர்சிடெஸ் பென்ஸ் கார் பறக்கும் காராக மாறிய நிகழ்வு அரங்கேறியது.
கண் இமைக்கும் நேரத்தில் அதி வேகமாகச் சென்ற அந்த காரானது, எதிர்த்திசையில் தவறான வழியில் வந்ததுடன், சாலையின் மையத்தில் இருந்த தடுப்பையும் உடைத்துக்கொண்டு சென்றது. பின்னர் அது பல அடி உயரத்துக்கு மேலே பறந்துசென்று விழுந்தது.
நல்வாய்ப்பாக சம்பவ இடத்தின் அருகில் இருந்த பெட்ரோல் நிலையத்தில் அந்த கார் மோதவில்லை. அப்படி மோதியிருந்தால் பெரும் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருக்கும். மயிரிழையில் தப்பிய கதையாக பென்ஸ் கார் கீழே விழுந்து நொறுங்கியது.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கார் பறந்து விழுந்தபோது பெரிய இடி விழுந்ததைப் போல சத்தம் கேட்டது என்கிறார்கள்.
பிறகு அவசரச் சேவைத் துறையினர் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசேர்த்தனர். 55 வயதான அவர் கடுமையான சர்க்கரை நோய் பிரச்னையால் அவதிப்படுபவர். சர்க்கரை அளவு திடீரெனக் குறைந்ததால் அவர் காருக்கு உள்ளேயே மயங்கி விழுந்துவிட்டார்.
அதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், அதிவேகத்தில் செல்லத் தொடங்கி பெட்ரோல் நிலையம் அருகில் உள்ள சந்திப்பில் உயரே பறந்து பின்னர் விழுந்தது.
படுகாயம் அடைந்திருந்தாலும் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் உயிர் பிழைத்ததே பெரும் வியப்புதான் என்கிறார்களாம், மருத்துவர்கள்.
இது ஒரு பக்கம் இருந்தாலும், போக்குவரத்து அதிகாரிகள் கடமையே கண் என அவர்களின் வேலையில் கறாராக இருந்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஓட்டுநருடைய உரிமத்தை 90 நாள்களுக்கு நிறுத்தி வைத்துள்ளனர்.
அத்துடன் 1,600 ருமேனிய லியூ (ரூ.27,000) அபராதத்தையும் விதித்திருக்கின்றனர்.
விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது.