மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் முதல் கட்டமாக பள்ளிக்கல்விக்கான கொள்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. புதிய பார்வையில் கல்வி : உள்ளடங்கிய, சமத்துவ எதிர்கால ஆயத்தம் எனும் தலைப்பில் இது மையப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கையில் சொல்லப்பட்டுள்ள அம்சங்கள் வரவேற்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கின்றன.
தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இரு மொழிகளிலும் இந்தக் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
1. தமிழ்நாடு பள்ளிக்கல்வியின் தற்போதைய நிலை, சூழல், தொலைநோக்கு,
2. சமத்துவம், உள்ளடக்கிய கல்வி மற்றும் சமூக நீதி,
3. அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு,
4. கலைத்திட்டம், கற்பித்தல் மறுசீரமைப்பு மற்றும் மொழிக்கொள்கை,
5. 21.ஆம் நூற்றாண்டின் திறன்கள் மற்றும் எண்மக் கல்வியறிவு,
6. மதிப்பீட்டுச் சீர்த்திருத்தங்கள்,
7. ஆசிரியர் பணித்திறன் மேம்பாடு,
8. பாதுகாப்பான, உள்ளடங்கியப் பள்ளிகள் மற்றும் முழுமையான குழந்தை மேம்பாடு,
9. எதிர்காலப் பள்ளிகளுக்கான நெகிழ்வுத்தன்மை மற்றும் நிலையான உள்கட்டமைப்பு,
10. சமூகப் பங்கேற்பு மற்றும் பரவலாக்கப்பட்ட நிருவாகம் என பத்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அரசின் கொள்கை நிலைப்பாடு மிகவும் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
முன்னைய கருணாநிதி காலத்தில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி அறிக்கையை ஒப்பிட, இந்த அறிக்கை பல மடங்கு சுருக்கமாக உள்ளது.
பதினொன்றாம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்துசெய்யப்படும் என்பது அரசுத் தரப்பிலும் ஆதரவாளர்கள் தரப்பிலும் முக்கியமான கொள்கை மாற்றமாக முன்வைக்கப்படுகிறது. கல்வியாளர்களும் மாணவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தத்தைத் தந்துகொண்டிருக்கும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நீக்கப்படுவதை அமோகமாக வரவேற்றுள்ளனர். ஆனாலும் பெற்றோர்கள் தரப்பில் அச்சமும் கவலையும் ஒன்று வெளிப்பட்டுள்ளது.
அதாவது, பொதுத்தேர்வு இருந்ததால் 11ஆம் வகுப்புப் பாடத்தை கட்டாயமாக நடத்தவேண்டிய நிலை இருக்கிறது; இதை எடுத்துவிட்டால் பெரும்பாலான பள்ளிகள் குறிப்பாக தனியார் பள்ளிகள் 12ஆம் வகுப்பு பாடங்களை மட்டுமே நடத்தி பொதுத்தேர்வுக்குத் தயார்செய்வார்கள் என்பதே அவர்களின் அச்சம்.
அதற்கு பதிலளிக்கும்படியாக, பெற்றோர் தரப்பிலேயே, பாடம் நடத்துவதைக் கண்காணித்து வந்தால் இது ஒரு பிரச்னையே அல்ல என்கிறார்கள். இப்போது பள்ளி மேலாண்மைக் குழு தீவிரமாகச் செயல்படுத்தப்படுவதால் எளிதாக இந்தச் சிக்கலைக் கையாளமுடியும் என்பது அவர்களின் வாதம்.
கல்வியியல் எழுத்தாளரும் ஆசிரியருமான கலகல வகுப்பறை சரவணன், மதிப்பீட்டு முறை மாற்றம் பயன் தரக்கூடியது என்கிறார். “மாநிலக் கல்விக்கொள்கை, மதிப்பீட்டு முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறது. எழுத்துத்தேர்வை அதுவும் பொதுத் தேர்வை மட்டுமே பெரிதும் நம்புகிற நம் கல்வியில் மதிப்பீட்டு முறைகளில் சொல்லப்பட்டிருக்கிற மாற்றங்கள் தான் முதலில் நடைமுறைக்கு வரவேண்டும்.” எனக்கூறும் அவர்,
“தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு (CCE) முறை நடைமுறைக்கு வந்து வளராமல் தேய்வது போல் இனி ஆகக்கூடாது. மதிப்பீட்டு முறைகளில் மாற்றத்தைத் தொடர்ந்து கற்பித்தல் முறைகள், பாடப்பொருள் ஆகியவையும் மாறவேண்டும். குழந்தைகளின் கற்றலுக்குப் பள்ளியே பொறுப்பு என்று மாநிலக் கல்விக் கொள்கை சொல்கிறது. ஆசிரியரே பொறுப்பு என்றும் கொள்ளலாம். மாநில கல்விக் கொள்கை சொல்வது போல 'மாற்றம் கீழிருந்து' என்பது முழுமையாகச் செயலுக்கு வரவேண்டும் என்றால் வகுப்பறைகளுக்கு உள்ளிருந்தே மாற்றங்களுக்கான உரையாடல் தொடங்க வேண்டும்.” என வலியுறுத்துகிறார்.
கல்வியாளரும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு, முதலில் மாநில அரசாங்கம் இப்படியொரு தனிக் கல்விக்கொள்கையை வெளியிட்டுள்ளதைப் பாராட்டி வரவேற்றுள்ளார். இரு மொழிக் கொள்கை, பிற மாநிலக் குழந்தைகளுக்கு அவரவர் தாய்மொழியைக் கற்பித்தல், எட்டாம் வகுப்புவரை தடையின்றி எந்தக் குழந்தையையும் நிறுத்திவைக்காமல் முன்னேறிப் படிக்க கல்விச் சூழலை உருவாக்குதல் எனப் பல்வேறு அம்சங்கள் பாராட்டும்படியாக உள்ளன என்கிறார், அவர்.
குறிப்பாக, “மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் முதல் ஆண்டு வாரியத் தேர்வு இல்லாமல், மேல் நிலைப்பள்ளி படிப்பில் இரண்டாம் ஆண்டு மட்டுமே வாரியத் தேர்வு இருக்கும் என்பதும் வளர்ந்த குழந்தைகளின் உளவியலை உணர்ந்து எடுக்கப்பட்டுள்ள நியாயமான நடவடிக்கை.” என்பதும் பிரின்சின் அழுத்தமான கருத்து.
மேலும், “ ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல், பயிற்சி, குழந்தை நேயக் கற்றல் சூழல், மாணவர்களுக்கு விளையாட்டு, கலை, அறிவியல் அனைத்தும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியைத் தருவதாக பள்ளிக் கல்வி செயல்பாடுகள் அமைந்திருக்கும் என்று கொள்கை தெரிவிக்கிறது.
கலைஞரின் சமச்சீர்க் கல்விக் கோட்பாட்டிற்கு நேரெதிராக மாதிரிப் பள்ளிகள் (Model Schools) மற்றும் தகைசால் (VETRI) பள்ளிகள் குறித்த அறிவிப்புகள் இந்தக் கொள்கையில் மிகவும் கவலை தரும் அம்சமாக உள்ளது.
பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் என்ற அடிப்படையில் பள்ளிக் கல்விக் கட்டமைப்பில் உள்ள பாகுபாடு, சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் உறுதி செய்யவில்லை. இத்தகைய கட்டமைப்பு சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது.
இந்தியா விடுதலை அடைந்து 78 ஆண்டுகள் கடந்த பின்னரும் அனைவருக்கும் சமமானப் பள்ளிக் கல்வியை உத்தரவாதப் படுத்த இயலவில்லை என்பது மிகப் பெரும் வேதனை.
இன்றைய சமமற்ற கல்விமுறையை நீடிக்கச் செய்து, படிப்படியாக தனியாரிடம் கல்வியை ஒப்படைக்கும் சூழ்ச்சி நிறைந்ததாக உள்ளது என்பதே தேசியக் கல்விக் கொள்கை 2020 நிராகரிப்பிற்கு மிக முக்கியமான காரணம். மாநிலக் கல்விக் கொள்கையிலும் அத்தகைய பாகுபாடுகள் நியாயப்படுத்தப்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.” என்றும் அவர் குறைபட்டுக்கொள்கிறார்.
மேலும்,” அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை தனித்தனியாக தராமல், மொத்தமாக 58,800 பள்ளிகள், மூன்று இலட்சம் ஆசிரியர்கள், 1.16 கோடி மாணவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் எண்ணிக்கையைத் தந்து, அதை வலுப்படுத்தவும், விரிவாக்கவும் எந்த உத்தரவாதமும் இக்கொள்கையில் இடம் பெற வில்லை. ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவது கற்றல் கற்பித்தல் செயல்பாட்டிற்கு அடிப்படைத் தேவையாகும். இது குறித்து கொள்கையில் எந்த அறிவிப்பும் இல்லை.
ஆசிரியர்கள் அல்லாத தொண்டர்கள், தொண்டு நிறுவனங்கள் பள்ளிச் செயல்பாட்டில் தலையிடுவதும், தொண்டின் அடிப்படையில் பழைய மாணவர்கள் தொடங்கி, சமூகத்தின் அனைவரும் நிதி மற்றும் பள்ளித் தேவைக்கான பங்களிப்பு செய்வது என்பதும் கண்ணியமிக்க வாழ்க்கையைக் குழந்தைப் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு உறுதிசெய்ய இயலாது.
மக்கள் செலுத்தும் வரியில் இருந்து கட்டணமில்லா கல்வியை அனைவரும் பெறுவதே கண்ணியமிக்க வாழ்வுரிமை. மாநிலக் கல்விக் கொள்கையின் நோக்கம் சிறந்தது, அதேவேளையில், சமச்சீர்க் கல்விக் கோட்பாட்டின் அடிப்படையில் மாநிலப் பள்ளிக் கல்விக் கொள்கை அமையாததும், பள்ளிக் கல்வியை முடித்து, உயர்கல்வி தொடர நுழைவுத் தேர்வு இருக்காது என்ற திட்டவட்டமான அறிவிப்பு இல்லாததும் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.
முதலமைச்சர் கலைஞரின் சமச்சீர்க் கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிக் கல்வியில் சமமான கற்றல் வாய்ப்பை சீராக அனைவருக்கும் உறுதிப்படுத்தும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கையை மேம்படுத்த வேண்டும்.” என்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்திக் கூறுகிறார்.
"தமிழ்நாடு அரசாங்கம் 2022 இல் நீதிபதி முருகேசன் அவர்கள் தலைமையில் அமைத்த உயர்நிலைக் குழு 2024 இல் அரசாங்கத்திடம் தான் தயாரித்த கல்விக் கொள்கையை அளித்தது. மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒரு கல்விக் கொள்கையை பொது வெளியில் வைத்து அனைவரின் கருத்துக்களைக் கேட்காமலும் சட்டமன்றத்தில் கூட வைத்து எந்த விவாதமும் நடத்தாமலும் தன்னிச்சையாக மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கும் ஜனநாயக விரோதச் செயலாகும்." எனக் கண்டிக்கிறார், கல்வியாளரும் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி (AISEC)-யின் மாநிலச் செயலாளருமான க. யோகராஜன்.
தமிழ்நாடு அரசாங்கத்தால் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் தேசியக் கல்விக் கொள்கை 2020 யின் பல்வேறு திட்டங்களான எண்ணும் எழுத்தும் திட்டம், மணற்கேணி, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், திறன் மேம்பாடு, அனுபவக் கற்றல், ஒப்பார் கற்றல், எண்மக் கற்றல் (இணைய வழிக் கல்வி), மாதிரி பள்ளிகள் போன்ற பல திட்டங்களை தொகுத்து வழங்கி இருக்கும் இந்த அறிக்கை ஒரு கல்விக்கொள்கையின் எந்த அடிப்படைக் கூறுகளையும் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் சாடுகிறார்.
மேற்கண்ட திட்டங்கள் யாவும் கல்வி விரோத, மாணவர் விரோதத் திட்டங்கள் என கல்வியாளர்கள், ஆசிரியர்கள் விமர்சித்து வந்த வேளையில் அதையே கல்விக் கொள்கையில் அறிவித்திருப்பது இந்தக் கொள்கையின் ஜனநாயக விரோத அணுகுமுறையைக் காட்டுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
”ஏற்கெனவே கடந்த 15 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணி இடங்களை நிரப்பாமல் பல பள்ளிகள் ஓராசிரியர் அல்லது ஈராசிரியர் பள்ளிகளாக தத்தளித்து வருவதைப் பற்றி இந்த கல்விக் கொள்கை வாயே திறக்காததோடு ஆசிரியர் மாணவர் விகிதத்தைப் பற்றிக் கூட எதுவும் கூறாமல் இருப்பது ஒரு கல்விக் கொள்கையின் எந்த அடிப்படை சாராம்சத்தையும் அதுக் கொண்டிருக்கவில்லை என்பதையே மீண்டும் உணர்த்துகிறது.
பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத சூழலில் மாணவர்களின் எழுதும் வாசிக்கும் திறனும் கணிதத்திறனும் தோல்வி அடைந்து விட்டதாக பல அகில இந்திய ஆய்வுகள் அறிவித்த பின்னரும் கூட வகுப்பு 1 முதல் வகுப்பு 8 வரை கட்டாயத் தேர்ச்சித் திட்டத்தை தொடரப் போவதாக இக்கல்விக் கொள்கை மூலம் அறிவித்திருப்பது மேலும் அதிர்ச்சியூட்டுவதாய் அமைந்துள்ளது.
இதுமட்டுமின்றி கல்வி உரிமைச் சட்டம் 2009 யின் ஒரு முக்கிய அம்சமான பள்ளி மேலாண்மைக் குழுத் திட்டம், நம்ம ஊரு நம்ம ஸ்கூல் திட்டம், பெரு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்புத் திட்டம், முன்னாள் மாணவர்கள் பங்களிப்புத் திட்டம், கல்வியில் சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு போன்ற திட்டங்களின் மூலம் மாநில அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பையும் பொறுப்பையும் படிப்படியாக குறைக்கும் ஒரு திட்ட வரைபடமாகவே (Blue Print) தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை அமைந்துள்ளது.
கல்விக்காக தமிழ்நாடு அரசாங்கம் 13.7% நிதி ஒதுக்குவதாகப் பெருமை அடித்துக் கொண்டாலும் அது ஒதுக்கி வரும் நிதி போதுமானதாக இல்லை என்பதே உண்மை. அதை ஒப்புக் கொள்ளாமல் பள்ளிகளின் அன்றாடத் தேவைகளுக்காகவும் ஆதாரங்களுக்காகவும் மேற்கண்ட வகையில் பொது வெளியில் நிதி திரட்ட ஒரு கல்விக் கொள்கையே முன்மொழிந்து இருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது. இது அரசுப் பள்ளிக் கட்டமைப்பை சிதைத்து கல்வியில் தனியார்மயத்தையும் வியாபாரமயத்தையும் ஊக்குவிக்கும் போக்கேயாகும் என்பதில் ஐயமில்லை.
எனவே தமிழ்நாடு அரசாங்கம் நீண்ட காலதாமதத்திற்குப் பின் தேர்தல் நெருங்கும் வேளையில் அவசர கதியில் வெளியிட்டிற்கும் இந்தக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற்று அதனை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும். அனைத்துத்தரப்பு மக்களின் கருத்துக்களைப் பெற்று உரிய திருத்தங்களை மேற்கொண்டு அடித்தட்டு தமிழ்நாட்டு மக்களின், ஆசிரியர்களின், மாணவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு நியாயமான, ஜனநாயகப்பூர்வ, அறிவியல்பூர்வக் கல்விக் கொள்கையாக மாநிலக் கல்விக் கொள்கையை தமிழக அரசு வெளியிடவேண்டும்.” என்றும் யோகராஜன் வலியுறுத்துகிறார்.
பின்குறிப்பு :
சொல்லிவைத்தாற்போலவோ என்னவோ, தமிழ்நாட்டின் மாநிலக் கல்விக் கொள்கையை இங்கு அரசு வெளியிட்ட நாளில், கர்நாடகத்தில் அந்த மாநில கல்விக்கொள்கை அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட யுஜிசி முன்னாள் தலைவர் சுகதேவ் தோரட் தலைமையிலான குழு, அந்த மாநில முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் நேற்று தன்னுடைய அறிக்கையை அளித்தது.
தமிழகத்தைப் போலவே அங்கும் இரு மொழிக் கொள்கைதான் என்றாலும், முதல் ஐந்து வகுப்புகளில் கட்டாயமாகவும் 12ஆம் வகுப்புவரை விருப்பமாகவும் கன்னடம் அல்லது தாய்மொழிவழிக் கல்விதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது முக்கியமானது.