இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா மீது இன்று காலையில் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது, அமெரிக்க இராணுவம். அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், பெரும் தாக்குதலையடுத்து அதிபர் நிகோலஸ் மதுரோவையும் அவரின் மனைவி சிலியா புளோரசையும் கைதுசெய்துள்ளதாகவும் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதேநேரம், தங்கள் நாட்டு அதிபரைப் பற்றிய தகவல் தெரியவில்லை என வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ஊடகச் சந்திப்பில் கூறியுள்ளார். மதுரோ உயிரோடு இருப்பதற்கான நிரூபணத்தைக் காட்டவேண்டும் என டிரம்பை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, வெனிசுலாவில் உள்ள பெட்ரோலிய வளத்தை டிரம்ப் அரசு கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளதாக மதுரோ குற்றம் சாட்டியிருந்தார். அதற்கேற்ப டிரம்பும் காரகஸ் உட்பட வெனிசுலா நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். இதனிடையே, எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெனிசுலா அரசும் மதுரோவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் அமெரிக்காவுக்குள் அதைக் கொண்டுசெல்வதாகவும் டிரம்ப் சாட்டியிருந்தார். ஆனால் அதைத் திட்டவட்டமாக மறுத்த மதுரோ அரசு, அமெரிக்க அரசுடன் போதைத் தடுப்பு குறித்து தாங்கள் பேசத் தயார் என பதில் அளித்தது.
அதையும் மீறி வெனிசுலாவின் பெட்ரோலியக் கப்பல் ஒன்றை அமெரிக்கா தாக்கி கைப்பற்றியது. தொடர்ச்சியாக இன்று தலைநகர் காரகஸ்ஸின் பல இடங்களில் வான்படைகளைக் கொண்டு தாக்குதலும் நடத்தியது.
பெருந்தாக்குதலுக்குப் பின்னர் அதிபர் மதுரோவைக் கைதுசெய்துவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு ஈரான், இரசியா உட்பட பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் சட்டத்துறையின் ஆலோசனைப்படிதான் மதுரோவைக் கைதுசெய்ததாக டிரம்ப் கூறினாலும், இது சட்டப்படியானது அல்ல என அமெரிக்க விவகாரங்கள் துறை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். காரகசைத் தளமாகக் கொண்டு இயங்கும் நெருக்கடி தீர்வுக்குழு ஒன்றின் பில் குன்சன், பனாமா நாட்டில் இப்படித்தான் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டைக் கூறி 1990 ஜனவரி 3ஆம் தேதி அந்நாட்டு அதிபர் மானுவேல் நொரீகாவைக் கைதுசெய்தது அமெரிக்கா என்று நினைவூட்டினார்.
இன்று காலை அமெரிக்கப் படைகளின் தாக்குதல் தொடங்கியதுமே, அதிபர் மதுரோ நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அதையும் மீறி, தலைநகர் காரகஸ் மீது மட்டுமின்றி, மிரண்டா, அரகுவா, குவாய்ரா ஆகிய மாநிலங்கள் மீதும் அமெரிக்காவின் தாக்குதல் நடைபெற்றது. திடீர்த் தாக்குதல்களால் அதிர்ச்சி அடைந்த மக்கள், தெருக்களில் பாதுகாப்புக்காக ஓடி குவிந்தனர்.
காரகஸில் உள்ள போர்ட் டியூனா எனும் இராணுவ மையத்தில் பல முறைகள் வெடிப்புகள் நிகழ்ந்து பெரும் வெளிச்சம் ஏற்பட்டதாகவும் அங்கிருக்கும் ஊடக முகமைகளின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.