சிவகங்கை மாவட்டம் அஜித்குமார் கொலைவழக்கில் நகைத்திருட்டுப் புகார் அளித்த நிகிதாவின் பின்னணி, சித்ரவதைக் கொலையைப் பின்னால் தள்ளிவிட்டது. அந்த அளவுக்கு நிகிதாவைப் பற்றிய கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிவருகின்றன.
முன்னதாக, நிகிதா புகார் அளிக்கவில்லை என்றும் வாய்மொழியாக அளித்த புகாரைக் கொண்டு டிஎஸ்பி தனிப்படையினர் சீருடை இல்லாமல் அஜித்தைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர் என்பது முதல் கட்டம் வெளியான தகவல். ஆனால் நிகிதா திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்து அதன்படி அஜித்தைக் கூப்பிட்டு விசாரித்து அனுப்பிவிட்டார்கள் என்பது தெரியவந்தது.
விவகாரம், நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை எனும் கட்டத்துக்குச் சென்றுவிட்டதால், இப்போது யாரும் கதைசொல்லித் தப்பிவிட முடியாது என்பது உறுதியாகியுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்றாவது நாளாக விசாரணை நடத்திவரும் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், இன்று திருப்புவனத்தில் மருத்துவர்களிடம் விவரங்களை விசாரித்தார்.
இதனிடையே, திருட்டுப் புகார் அளித்த நிகிதாவே ஒரு மோசடிப் பேர்வழிதான் என்று தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளன.
முதலில், தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர் சேங்கை மாறன் என்பவர், அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் 50 இலட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு சமரசமாகப் போகப் பேரம் பேசினார்; அஜித்தின் தாயாரையும் தம்பியையும் தி.மு.க. கொடி கட்டப்பட்ட தன்னுடைய காரில் மதுரைக்குக் கூட்டிச்சென்றார் என்று பகிரங்கமாகவே பலரும் குற்றம்சாட்டினர். குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் நீதிமன்றத்திலும் இதைத் தெரிவித்தார்.
அத்துடன், நிகிதாவுக்கு ஆதரவாக சென்னை கோட்டையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் வலியுறுத்தியதால்தான், டிஎஸ்பி சண்முகசுந்தரம் நேரடியாக இதில் ஆர்வம் காட்டி அஜித்குமாரைப் பிடித்து சித்ரவதை செய்யும் அளவுக்குப் போனது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
சேங்கை மாறனின் தலையீடு யாருக்காக யாரைப் பாதுகாக்க என சிறு அமைப்புகள் முதல் அ.தி.மு.க., பா.ஜ.க. உட்பட்ட எதிர்க்கட்சிகள்வரை சரமாரியாகக் கேள்வி எழுப்பின.
அதற்கு தி.மு.க. தரப்பிலோ தி.மு.க.வின் கட்டணப் பரப்புரையாளர்கள் தரப்பிலோ எந்த பதிலும் வெளிவராமல் கனத்த அமைதி நிலவியது.
இந்த நிலையில், நேற்று மாலையிலிருந்து நிகிதா மீதான மோசடிப் புகார் ஒன்று மீண்டும் பேசுபொருளாக ஆனது. இன்று காலையில் நிகிதாவின் முகநூல் பக்கத்தில் உள்ள பல பதிவுகளை எடுத்து, குறிப்பாக அண்ணாமலையுடன் அவர் இருப்பதைப் போல ஒரு படத்தையும் சேர்த்து, நிகிதா பா.ஜ.க. ஆள் என ஹேஷ்டேக் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தொடங்கினர். அதில், முக்கியமான இழை, #நிகிதா_பாஜக-நபரா என்பது!
தி.மு.க. மட்டுமின்றி, தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நிகிதாவின் பா.ஜ.க. பின்னணி எனக் குறிப்பிட்டு, அதுவும் பிரச்னைக்குக் காரணமாக இருக்கும் எனக் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பீம்ராவின் சமூக ஊடகப் பதிவு, இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அதிகமாகப் பரவிய மற்றொரு சமூக ஊடகப் பதிவு, பிரபல தி.மு.க. ஆதரவுப் பேச்சாளர் செந்தில்வேல் வெளியிட்டது!
இதன் தொடர்ச்சியாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தபின்னர், நிகிதா பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதில் பா.ஜ.க. பின்னணியையும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
தி.மு.க. அணியின் தரப்பில் சொல்லவருவதன் சாரம், பா.ஜ.க. பின்னணி செல்வாக்கால்தான் நிகிதா இப்படி செல்வாக்காக மேலதிகாரிகளைக் கொண்டு அஜித்குமார் கொலைவரை என்னென்னவோ நடந்துவிட்டது என்பது!
ஆனால், முன்னர் எதிர்க்கட்சிகள் தரப்பிலும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தரப்பிலும் தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர் 50 இலட்சம் ரூபாய்வரை பேசியதற்கான பின்னணி என்பதைப் பற்றி இவர்கள் மூச்சுவிட மறுக்கிறார்களே என்கிறது எதிர்த்தரப்பு!
கொடுமை, இந்த இரு தரப்பு அக்கப்போரில் ஒரு மனித உயிர் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டதைப் பற்றிய பேச்சு மெல்ல மெல்ல அமுங்கிப்போவதுதான்!
ஒருவேளை இது திட்டமிட்டு அமுக்கப்படுகிறதா என்பதை எதிர்வரும் சில நாள்கள் சொல்லிவிடும்.
நீதிமன்ற விசாரணையில், உள்ளே இருக்கும் எந்தப் பூனைக்குட்டியும் தப்பமுடியாது என்பதுதான் இப்போதைய நிலவரம்!