டிஜிட்டர் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும் பாஜக ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக சில நாள்களுக்கு முன் குற்றஞ்சாட்டிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக சில ஆதாரங்களையும் வெளியிட்டாா்.
அதேநேரம், ராகுல் வெளியிட்ட தரவுகள் தவறானவை என்று தோ்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.
இது தொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில், “வாக்குகள் திருடப்படுவது என்பது ‘ஒரு நபர் - ஒரு வாக்கு’ என்ற அடிப்படை கருத்தியலுக்கு எதிரானது.
சுதந்திரமான மற்றும் நியாமான தேர்தலுக்கு, நேர்மையான வாக்காளர் பட்டியல் அவசியமானது. தேர்தல் ஆணையத்திடம் தெளிவான கோரிக்கையை வைத்துள்ளோம், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய டிஜிட்டர் வாக்காளர் பட்டியலை வெளியிட்டால், மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சரிபார்க்க இயலும்.
இந்தப் போராட்டம் நமது ஜனநாயகத்தைக் காப்பதற்காக மட்டுமே. எங்களுடன் சேர்ந்து கோரிக்கைக்கு ஆதரளிக்க http://votechori.in/ecdemand என்ற இணையதளத்தை அணுகலாம், 9650003420 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.