4 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி இமயமலை பயணம்! நாளை ஜெயிலர் படம்!
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் நாளை திரைக்கு வரவுள்ள நிலையில், ரஜினி இன்று இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இமயமலைக்குச் செல்கிறார்.
முன்னதாக, இன்று காலை 8 மணியளவில் சென்னை, போயஸ் தோட்டம் பகுதியில் உள்ள தன் வீட்டிலிருந்து ரஜினிகாந்த் விமானநிலையத்துக்குப் புறப்பட்டார். அப்போது, வீட்டின் அருகில் இருந்த செய்தியாளர்கள் அவரிடம் புதிய படம் குறித்து கேள்விகள் கேட்டனர்.
நீண்ட காலம் கழித்து இமயமலை செல்கிறீர்களே எனக் கேட்டதற்கு, “ஆமாம், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு போகிறேன். இடையில் கோவிட எல்லாம் வந்ததால் இப்போது போகிறேன்...” என்று ரஜினிகாந்த் கூறினார்.
ஜெயிலர் படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் கருத்து சொல்லுங்கள் என சிரித்துக்கொண்டே கூறினார்.
பின்னர் விமானநிலையத்திலும் ரஜினியிடம் செய்தியாளர்கள் படம் பற்றியே கேட்டனர். அப்போதும், நாளை படம் பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்களேன் எனக் கூறிவிட்டு நகர்ந்தார், ரஜினி.