கோப்பையுடன் பேட் கம்மின்ஸ்
கோப்பையுடன் பேட் கம்மின்ஸ்

உலகக் கோப்பை: ஆறாவது முறையாக தட்டித் தூக்கிய ஆஸி!

கடைசியாக...சொன்னமாதிரியே செய்து காண்பித்துவிட்டார் பேட் கம்மின்ஸ்.

விளையாட்டில் ஒரு அணிக்கு சாதகமாக ஒட்டுமொத்த மைதான ரசிகர்களே இருக்கும்போது அவர்களை அமைதியாக்குவதைப் போல் சிறந்தது வேறொன்றும் இல்லை என ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்துக்கு முன்னதாக சொல்லி இருந்தார். அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் மரண அமைதியைக் கொண்டுவந்துவிட்டார். ஆஸ்திரேலியா ஆறாவதுமுறையாக உலகக் கோப்பையை வென்று இருக்கிறது.

வெற்றிக்களிப்பில் ஆஸி அணி!
வெற்றிக்களிப்பில் ஆஸி அணி!

241 என்ற இலக்குடன் உதவிக்கு பனிப்பொழிவுடனும் ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே வார்னர், மிட்சல் மார்ஷ், ஸ்மித் என மூவரும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். ஆனால் ட்ராவிஸ் ஹெட், லாபுஷேன் இருவரும் நிலைத்து நின்று ஆடி 42 ரன்கள் மிச்சம் இருக்கையில் இலக்கை எட்டிப் பிடித்தனர். ட்ராவிஸ் ஹெட் 137 ரன்களையும் லாபுஷேன் 58 ரன்களையும் குவித்து வெற்றியை வசமாக்கினர்.

முன்னதாக டாஸில் வென்ற ஆஸ்திரேலியா இந்திய அணியை மட்டையாடுமாறு பணித்தது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.

ஷுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் விராட் கோலி களமிறங்கினார். கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கியது முதலே அதிரடி காட்டினார். அதிரடியாக விளையாடிய அவர் 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்து மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஸ்ரேயஸ் ஐயர் வந்த வேகத்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதன்மூலம் 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா அதன்பின் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி இந்திய அணியின் ரன்களை சற்று உயர்த்தினர்.

நிதானமாக விளையாடிய விராட் கோலி 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ரன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

நிதான ஆட்டத்தைக் கடைபிடித்த கே.எல்.ராகுல் 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹேசில்வுட் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஆட்டத்தின் போக்கை ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் தீர்மானித்தனர். குறைந்த ரன்களில் இந்தியாவைக் கட்டுப்படுத்தியதாலும் டாஸ் அவர்களுக்கு சாதகமாக அமைந்ததாலும் வெற்றி கிடைத்தது. கடந்த ஒன்பது போட்டிகளில் சரியாக செயல்பட்ட இந்திய அணி இறுதிப்போட்டியில் கோட்டை விட்டது!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com