இந்தியா – ஆஸி. இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து!

இந்தியா – ஆஸி. இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து!
Published on

இந்தியா – ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2ஆவது போட்டி வரும் 31ஆம் தேதி மெல்போர்னில் நடக்கிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டி20 போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடந்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் கண்டனர். இதில் அபிஷேக் சர்மா 19 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.

இந்திய 5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 43 ரன் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதன் காரணமாக ஆட்டம் சிறிது தடைப்பட்டது. தொடர்ந்து மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கியது. அப்போது போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 9.4 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 97 ரன்கள் எடுத்த போது மீண்டும் மழை பெய்தது. இதன் காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. கில் 37 ரன்னுடனும், சூர்யகுமார் 39 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது போட்டி வரும் 31ஆம் தேதி மெல்போர்னில் நடக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com