அச்சச்சோ... ஹாக்கி இறுதிப்போட்டி வாய்ப்பு போச்சே!
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கியின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும், வெண்கலப் பதக்கத்திற்காக விளையாடவுள்ளது.
33ஆவது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் நேற்றைய தினம் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தார். இதேபோல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு சென்றதன் மூலம், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் வினேஷ் போகத்.
இந்நிலையில், நேற்றைய தினம், ஆடவர் ஹாக்கி போட்டியின் அரையிறுதிப் போட்டி நடந்தது. அதில் இந்தியாவும் ஜெர்மனியும் விளையாடின. இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பாக இருந்த இந்தப் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்தது. பரபரப்பாக நடந்த போட்டியில் இரு அணிகளும் இறுதி வரை கோல்களை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தின.
2 கோல்களுடன் ஆட்டம் சமனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் ஜெர்மனி அணி கூடுதலாக ஒரு கோல் அடித்து 2-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு ஜெர்மனி முன்னேறியது. இந்தநிலையில், நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, ஸ்பெயினை எதிர்கொள்கிறது.