பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு தான் டாப்... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on

“இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 - 2025 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் 11.19 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் கணிக்கப்பட்டதை விட 2.2 சதவீதம் அதிக வளர்ச்சியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 மாதங்களுக்கு முன்பு 9.69 சதவீதமாக இருந்ததும் கவனிக்கத்தக்கது.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சியை பெற்று நாட்டிலேயே முதல் இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு இது 12 சதவீதமாக உயரம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருக்குறள் ஒன்றை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ள அவர்," இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு! இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா? அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது!

இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி! 2030-ஆம் ஆண்டுக்குள் #OneTrillionDollar பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. "இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?" என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)" என பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com