அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

100 கேள்விகள்… பா.ஜ.க.வின் ஜாலம் எடுபடாது! – தி.மு.க. பதில்

”நூறுக்கு நூறு பொய்யான கேள்விகளை தொடுத்து பொதுமக்களை திசை திருப்பும் பா.ஜ.க.வின் மாயாஜல வித்தைகள் இனி எதுவும் எடுபடாது” என்று தி.மு.க. பதில் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் பல நாளேடுகளின் முதல் பக்கத்தில் தமிழக பா.ஜ.க. விளம்பரம் ஒன்று கொடுத்திருந்தது. அதில் “பிரதமர் மோடி அரசைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் தமிழகத்தின் தீயசக்தி 100 கேள்விகளில் ஒன்றுக்காவது பதில் சொல்ல முடியுமா? என்று நூறு கேள்விகளையும் வெளியிட்டிருந்தது.

அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க., ’மக்களைத் திசைதிருப்பும் பா.ஜ.க.வின் ஜாலம்’ எனச் சாடியுள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

”தி.மு.க.வின் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பா.ஜ.க. பத்திரிகை விளம்பரங்களின் மூலம் இன்று கேட்டுள்ள 100 கேள்விகளில் 43 வாக்குறுதிகளைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையை இப்பொழுதாவது - திமுகவை குறை கூறுவதற்காகவே - இப்போதாவது படித்தீர்களே. அதற்காக உங்களுக்கு எங்கள் நன்றி.

இதன் மூலம் மக்கள் பிரச்சினைகளில் தி.மு.க. எப்படிக் கவனம் செலுத்துகிறது எப்படிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உங்களால் இப்போதாவது புரிந்து கொள்ள முடியும். அதற்காகத்தான் எங்கள் நன்றி.

ஒன்றை நினைவுபடுத்துகிறோம்!

2021 தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தி.மு.க. மக்களுக்குத் தந்த வாக்குறுதிகள் 505

இவற்றில் உங்கள் கணக்குப்படி 43 வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை: வாதத்திற்காக ஒப்புக் கொள்கிறோம்.

ஆனால், தி.மு.க. அளித்த வாக்குறுதி 505-இல் இந்த 43 தவிர உங்கள் கணக்குப்படி எஞ்சியவைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன அல்லவா! 462 வாக்குறுதிகளும்

ஜனநாயக முறைப்படி தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டும்.

தி.மு.க. ஆட்சியின் 5 ஆண்டுகளில் முடிந்திருப்பது 3 ஆண்டுகள். எஞ்சியுள்ள 2 ஆண்டுகளில் மிச்சமுள்ள 43 கோரிக்கைகளையும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நிறைவேற்றி முடித்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுவோம் நாங்கள்!

இது தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உண்மையான அரசியல் நடத்தும் கட்சிகள் அனைத்திற்கும் நன்றாகத் தெரியும். உங்களுக்குத் தெரியாது. காரணம் நீங்கள் நடத்துவது உண்மையான அரசியல் அல்ல! மோசடி அரசியல்!

இந்திய அரசியலில் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு; அதன் மூலம் மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் போட்டியிடும் வழக்கத்தையும், வெற்றி பெற்றுப் பொறுப்புக்கு வந்தபின் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வழக்கத்தையும் மற்ற கட்சிகளுக்கெல்லாம் கற்றுக் கொடுத்த கட்சி தி.மு.க.! இது உங்களுக்குப் புரியாது.

காரணம் என்னவென்றால், 2014 தேர்தலுக்கு முன்பாக நீங்கள் அளித்த வாக்குறுதிகளில் 10 ஆண்டுகள் ஆகியும் ஒன்றைக்கூட நிறைவேற்றாத உத்தமப் பொய்யர்கள் அல்லவா நீங்கள்!

நீங்கள் நிறைவேற்றாத வாக்குறுதிகளைக் கூறி 100 முறை கேட்டோமே! அதற்காக ஒரு முறையாவது பதில் சொன்னீர்களா?

ஒரு திரைப்படக் காட்சி திருவிளையாடல் படம்: அதில் தன்னைக் குறை சொல்லித் திட்டிக் கொண்டிருந்த பக்தன் தருமி முன் சிவபெருமான் திடீரெனத் தோன்றுவான். அப்போது தருமியிடம் வாக்கு வாதம் செய்த சிவன் முதலில் கேள்விகளை நான் கேட்கவா? அல்லது நீ கேட்கிறாயா? என்பான்.

'வேண்டாம், வேண்டாம், நானே கேட்கிறேன். எனக்குக் கேட்கத்தான் தெரியும்: பதில் சொல்லத் தெரியாது’ என்பான் தருமி, அந்தக் காட்சிதான் எங்களுக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. அந்தப் பக்தன் தருமி கூறியது போல் பா.ஜ.க.வுக்குக் கேள்வி கேட்கத்தான் தெரியும். பதில் சொல்லத் தெரியாது. அதனால்தான் நாங்கள் 100 முறை கேட்ட கேள்விக்கு பா.ஜ.க.வினால் ஒருமுறை கூட பதில் அளிக்க முடியவில்லை.

உங்களால் பதில் அளிக்க முடியவே முடியாது; ஏனென்றால் நாங்கள் கேட்ட கேள்விகளில் இடம்பெற்றவைகளில் ஒன்றைக்கூட நீங்கள் நிறைவேற்றவில்லையே!

2015-இல் அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட 2019-இல் ஒரே ஒரு அடிக்கல் நாட்டிவிட்டு, அப்படியே டெல்லிக்கு ஓடிவிட்டவர்கள் அல்லவா நீங்கள்.

எங்கள் இளைஞரணிச் சிங்கம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீங்கள் வைத்த ஒற்றைக் கல்லைக் காட்டி ஊர் ஊராகச் சென்று உங்கள் பொய் முகத்தைத் தோலுரித்துக் காட்டிய பின்தான்: கேள்விகள் மேல் கேள்விகளைக் கேட்டுத் துளைத்த பின்தான் ரோஷம் பொத்துக் கொண்டு வந்து அவசர அவசரமாக இரண்டு நாட்களாக வேலை நடப்பதாகப் பம்மாத்து வேலை காட்டுகிறீர்கள்!

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி!

கடந்த டிசம்பரில் சென்னை, தூத்துக்குடி பகுதிகளில் பெய்த வரலாறு காணாத புயல் மழை வெள்ளத்தால் உயிர் உடைமைகளை இழந்து பரிதவித்து நின்ற மக்களுக்காக நிவாரணம் வழங்கிட எத்தனை முறை கோரிக்கைகள் வைத்தோம். ஒப்புக்காகவேணும் ஒரே ஒரு வார்த்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலுக்குக் கூட கூறவில்லையே!

ஒரு பைசாவைக் கூட நிவாரணமாக வழங்கிட வில்லையே! குஜராத்தில் மழை என்றதும் 1,000 கோடி ரூபாயை அள்ளிக் கொண்டுபோய் அவர்கள் கேட்காமலேயே உடனே எடுத்துச் சென்று கொடுத்தீர்களே!

உங்களைப் பொறுத்தவரை நீங்கள் இந்தியா முழுவதற்கும் பிரதமர். குஜராத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் உதவ வேண்டியவர் அல்லவா நீங்கள்! குஜராத் மாநிலத்திற்கு மட்டும் உதவினீர்களே, குஜராத் இந்தியாவில் இருக்கிறது. தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? வெளிநாட்டில் உள்ளதா? தமிழ்நாட்டிற்கு ஏன் நிவாரண உதவி வழங்கவில்லை?

பதில் சொல்லுங்கள்! பம்மாத்து பா.ஜ.க.வினரே. பல்லாயிரம் கோடிகளை வங்கிகளில் கடன்களாக வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்ற கொள்ளைக்காரர்களுக்குத் துணைபோன மோடிக் கூட்டமே பதில் சொல்லுங்கள்!

100க்கு 100 பொய்யான கேள்விகளை தொடுத்து பொது மக்களை திசை திருப்பும் பா.ஜ.க.வின் மாயாஜாலம் வித்தைகள் இனி எதுவும் எடுபடாது. இன்று தி.மு.க.வைப் பார்த்து 100 கேள்விகள் கேட்கிறீர்கள் ! அத்தனையும் பித்தலாட்டம்!” என்று தி.மு.க.வின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com