
கோயம்புத்தூரில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 164 கோடி இழப்பீடு பெறப்பட்டுள்ளது.
இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
”கோவையில் 45 ஆண்டுகளுக்கு முன்பு வடவள்ளி, சோமையம்பாளையம் மற்றும் வீரபாண்டி கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட 924 ஏக்கர் நிலத்திற்கு இழப்பீடு வழங்க 14.03.2026 அன்று தமிழ்நாடு அரசாங்கம் அரசாணை வெளியிட்டடுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் பாராட்டுகள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
”கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலத்தை கையகப்படுத்தியபோது அப்போதைய அரசாங்கம் ஒரு சென்ட்டுக்கு ரூ. 33 முதல் ரூ. 85 வரை மட்டுமே நிர்ணயித்தது. இந்த அற்பத்தொகையை ஏற்க மறுத்து நீதிமன்றத்தை விவசாயிகள் நாடினர். 2002ம் ஆண்டு நீதிமன்றம் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த பிறகும் அரசு தொடர்ச்சியாக மேல்முறையீடு செய்து கொண்டே இருந்தது. இறுதி தீர்ப்பு வந்த பிறகும் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படாமலேயே இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் 2013 முதல் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காகப் போராடி வந்தது. 2013ம் ஆண்டு வட்டித் தொகை ரூ. 43 கோடி மட்டும் விடுவித்தது. கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்ததையொட்டி அரசுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. துறை அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரிடம் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வந்தது.
தற்போது 14.03.2026 அன்று தமிழ்நாடு அரசு 164 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஆணை வெளியிட்டுள்ளது. 45 ஆண்டு காலம் வீதியிலும், நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் காரணமாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாகவும் இந்த வெற்றி பெறப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உறுதியாக போராடிய விவசாயிகளுக்கும், ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலமாக நீடித்தப் பிரச்னைக்கு நேரடித் தலையீட்டின் மூலம் தீர்வு கண்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கும் பாராட்டுகள்.” என்றும் பெ.சண்முகம் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.