சத்யபிரத சாகு
சத்யபிரத சாகு

2024 - தமிழக வாக்காளர் பட்டியல் வெளியீடு; ஆண்களை விஞ்சும் பெண்கள்!

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348-ஆக உள்ளது. ஆண்களைவிட 10 லட்சத்து 89ஆயிரத்து 394 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள அம்சங்கள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 330 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேரும் உள்ளனர்.

மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. இந்தத் தொகுதியில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக நாகை மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 140 வாக்காளர்கள் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் துறையின் இணையதளத்திலும் பார்வையிடலாம். வாக்காளர் பட்டியலின் இரண்டு நகல்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயர் இடம்பெறும் வாக்காளர்களுக்கு, பதிவுத் தபாலில் வாக்காளா் அடையாள அட்டைகள் மூன்று மாதங்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் என்றார் தலைமைத் தேர்தல் அதிகாரி.

இன்றில் இருந்து வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். வோட்டர் ஹெல்ப்லைன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,91,23,197 ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com