இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
சென்னை ஓமந்தூரர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: “வட கிழக்கு பருவ மழையையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சுமார் 10,000 மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஏதாவது ஒரு கிராமத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டால் அங்கு உடனடியாக முகாம் நடத்தப்படும். மழைக் காலங்களில் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. இதில், ஏடிஎஸ் வகை கொசு உற்பத்தியை தடுப்பதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதேபோல, ஏடிஎஸ் கொசு லார்வா புழுவாக இருக்கும் நிலையில் அதனை அழிப்பதற்காக மீன் வளர்த்தல், கொசு மருந்து அடித்தல், புகை அடித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு இருந்த அரசு அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே பொதுமக்களுக்கு தெரிவித்து வந்தது. ஆனால், தற்போதைய திமுக அரசு தனியார் மருத்துவமனையில் ஏற்படும் பாதிப்புகளையும் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு 15 ஆயிரத்து 796 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிரிழப்பானது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. உயிரிழந்த 8 பேரும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாவர். இவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் நோய் பாதிப்பு அதிகரித்து உயிரிழந்துள்ளனர். இதற்காகவே அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.