‘பேய் அரசாண்டால்…’ சர்ச்சை பதிவை நீக்கிய ஆதவ் அர்ஜுனா!

ஆதவ் அர்ஜுன்
ஆதவ் அர்ஜுன்
Published on

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி என தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைப் பதிவு ஒன்றை பதிவிட்டு சில நிமிடங்களிலேயே நீக்கியுள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய 9 குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர்.

இந்தச் சம்பவத்தில் தவறான திட்டமிடல் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தவெக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தது உள்ளிட்டக் காரணங்களாலும் கூட்ட நெரிசல் பலி ஏற்பட்டதாக காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தவெக பிரசாரக் கூட்டத்தில் பலியானவர்கள் குறித்து தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரப்பக்கூடாது என முதல்வர் ஸ்டாலினும் எச்சரித்திருந்தார்.

இதற்கு மத்தியில் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைப் பதிவு ஒன்றை வெளியிட்டு கடும் எதிர்ப்புகள் வெளியான நிலையில் சில நிமிடங்களிலேயே அதனை நீக்கியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா டெலிட் செய்த பதிவு
ஆதவ் அர்ஜுனா டெலிட் செய்த பதிவு

ஆதவ் அர்ஜுனா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில்,

“சாலையில் நடந்து சென்றாலே தடியடி...

சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது....

இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.

இளைஞர்களும், ஜென் ஸீ (genz) தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.

அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!” எனப் பதிவிட்டிருந்தார்.

இளைஞர்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டும் வகையில் இரவு 11.29 மணிக்கு ‘இலங்கை, நேபாளம் போல இளைஞர் புரட்சி எழுச்சிக்கான அறைகூவல்’ எனப் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா, பின்னர் 12 மணிக்கு இலங்கை, நேபாளம் போன்ற சொற்களை நீக்கிவிட்டு பதிவிட்டுள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் ஏற்பட்டு எதிர்ப்புகளைத் தொடர்ந்து பதிவை நீக்கியுள்ளார்.

இளைஞர்களை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் ஆதவ் அர்ஜுனாவை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com