அ.தி.மு.க. கூட்டணி: யார் வருவார்கள்? யார் விலகுவார்கள்?

அ.தி.மு.க. கூட்டணி: யார் வருவார்கள்? யார் விலகுவார்கள்?

நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் சில நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தேசிய கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தேசிய அளவிலான தேர்தல் களம் பா.ஜ.க. – காங்கிரஸ் கட்சிக்கு இடையிலானதாக இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. - அ.தி.மு.க. என்ற இரு திராவிட கட்சிகளுக்கு இடையிலான போட்டியாகவே கருதுவார்கள் தமிழக வாக்காளர்கள்.

தி.மு.க.வும் – அ.தி.மு.க.வும் யாருடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், களத்தில் என்னவோ பல முனைப்போட்டிதான் நிலவப்போகிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி போன்றவை தனி அணியாக தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன.

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.எம்., சி.பி.ஐ, முஸ்லிம் லீக், ம.தி.மு.க., கொ.ம.தே.க., த.வா.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் மக்கள் நீதி மய்யமும் இணையலாம் என்ற பேச்சும் அடிபட்டுகிறது.

தி.மு.க. கூட்டணி ஓரளவு இறுதியாகிவிட்டாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

“ஆளும் கட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். அதனால் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்” என்று அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கூறியிருந்தாலும், அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை இரண்டு கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜக., புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகளை இணைத்து பெரிய கூட்டணி அமைத்த அ.தி.மு.க.வின் இபோதைய கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்.டி.பி.ஐ. மட்டுமே இடம்பெற்றுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த அ.தி.மு.க., அண்ணாமலை மீது குறைகூறி அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது.

“அ.தி.மு.க.- பா.ஜ.க. பிரிந்தாலும் கடைசியில் இணைந்து கொள்வார்கள்” என்று கூறப்பட்டாலும், நேற்று முன்தினம் (ஜனவரி -29) செய்தியாளர் சந்திப்பில் பேசிய அ.தி.மு.க.வின் ஜெயக்குமார் “தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டாலும் பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை. தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி குறித்த விவரங்களை வெளியிடுவோம்.” என்றவர் அவசரப்படாதீங்க என்ற தொனியில் பேசினார்.

பா.ம.கவும் தே.மு.தி.க.வும் எந்தப் பக்கம் போகப்போகின்றன என்பது இன்னும் முடிவாகவில்லை. அந்த இரண்டு கட்சிகளும் தங்கள் நிலையை வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், அ.தி.மு.க.வின் தலைமையில் இடம்பெறப் போகும் கட்சிகளின் பட்டியலை அறிய நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

அதேபோல், அ.தி.மு.க. – தி.மு.க. கூட்டணியில் இணைய வாய்ப்பில்லாத டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க., ஓ.பி.எஸ். அணி பா.ஜ.க. கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது... கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம், ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆகியவை மத்திய பா.ஜ.க.வின் நடவடிக்கைகளை தொடர்ந்து ஆதரித்து வருவதால் அந்த கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்!

பா.ஜ.க.வின் தலைமையில் தனி அணி என்பது தமிழ்நாட்டு அரசியல் களத்தில் குட்டையைக் குழப்பி பரபரப்பை உண்டுபண்ண தயாராகி வருகிறது!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com