அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை ஒன்றிணைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
இதற்கிடையே, கடந்த 1ஆம் தேதி கோபி அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செங்கோட்டையன் வருகிற 5ஆம் தேதி (அதாவது இன்று) கோபியில் உள்ள புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேச உள்ளேன் என கூறினார்.
அதன்படி, கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கோபி கரட்டூர் ரோட்டில் உள்ள கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ”2017இல் ஆட்சியில் அமர்ந்த பிறகு 2019, 2021, 2024 தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் பல பிரச்னைகள் நேரிட்டன.
2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருக்க முடியும். இதை எடப்பாடியிடம் சொன்னேன். இதே கருத்தை எஸ்.பி. வேலுமணியும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமியை நான், நத்தம் விஸ்வநாதன், எஸ்பி வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சிவி சண்முகம் ஆகியோர் சந்தித்து பேசினோம் அப்போது, கட்சி தொய்வுடன் இருக்கிறது. தேர்தலில் எத்தனை வியூகம் அமைத்தாலும் நம்மால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் கழகத்தை ஒன்றிணைப்போம். வெளியே சென்றவர்களை சேர்ப்போம், மக்கள் நினைப்பதை நிறைவேற்றுவோம் என்பதை வலியுறுத்தினோம். நாங்கள் சொன்ன கருத்தை அவர் ஏற்கவில்லை.
கட்சியை விட்டு வெளியே சென்றவர்களும் மீண்டும் கட்சியில் இணைய விரும்புகின்றனர். அவர் வைக்கின்ற ஒரே வேண்டுகோள் எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான். வேறு எந்த கோரிக்கையும் அவர்கள் வைக்கவில்லை. இதை அவர்கள் பலமுறை வலியுறுத்தி வருகின்றனர். ஒன்றிணைத்தால்தான் வெற்றி பெற முடியும்.
ஒன்றிணைப்பதை விரைந்து முடிக்க வேண்டும். இதுதான் எங்களின் வேண்டுகோள். அப்படி ஒன்றிணைக்கவில்லை என்றால் அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். இதற்கு முடிவு வந்தால் மட்டும் தான் எடப்பாடி பழனிசாமியின் வெற்றி பயணத்தில் கலந்து கொள்வேன்.” என்றார்.