'ஜி' என்பவர்கள் கெட்டவர்களா…? அண்ணாமலை ஆதங்கம்!
”பா.ஜ.க பற்றி தவறான பிம்பத்தை தி.மு.க. கட்டமைத்துள்ளதாகவும், 'ஜி' என்று சொன்னால் கெட்டவர்கள் என்பது போல் சித்தரிக்கிறார்கள் எனவும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை அளித்த பதில்:
“பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேட்டியளிப்பதை மட்டுமே வேலையாக வைத்திருப்பவர் அண்ணாமலை என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். கூறுகிறார். நான் பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டியளிப்பதில்லை. இ.பி.எஸ். குற்றச்சாட்டு என்பது திராட்சை பழம் புளிக்கிறது என்பதுபோல் உள்ளது.
மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியில், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி. இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி. அதனால்தான் பிரதமர் மோடி தி.மு.க.வை மட்டும் குற்றம் சாட்டுகிறார்.
இ.பி.எஸ் 'ரோடு ஷோ' நடத்தினால் எவ்வளவு பேர் வருகிறார்கள் என பார்ப்போம். அவர்கள் வீதியில் வந்தால் யாரும் பார்ப்பதில்லை. தமிழக தலைவர்கள் பேசும் கூட்டங்களில் எல்லாம் மக்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு 500 பேருக்கு ஒரு சூப்பர்வைசரை வைத்து கண்காணித்து கூட்டம் சேர்க்கின்றனர். அந்த கட்சி தலைவர் பேசி முடிக்கும் வரை அங்கே உட்கார்ந்தால் தான் ரூ.250 பணம் கொடுப்பார்கள்.
பணத்தைக் கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ நடத்தினால் ஒருபோதும் மக்கள் வரமாட்டார்கள். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் வீதிக்கு வந்து மக்களை பார்க்கின்றனர்; சாதாரண மக்களும் மோடியை பார்க்க வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை இது 'ரோடு ஷோ' இல்லை; மக்கள் தரிசன யாத்திரை. மக்களை தரிசிப்பதற்காகவே பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தமிழகம் வருகின்றனர்.ஒரு பிரதமர் இப்படி மக்கள் அருகில் வந்து பார்க்கிறார் என்றால் மக்கள் மீது அவர் வைத்துள்ள அன்பைக் காட்டுகிறது. மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் ரோடு ஷோ செல்ல தயாரா?
தமிழ்நாட்டில் பட்டியலின மக்களை ஸ்டாலின் இரண்டாம் தர மக்களாக நடத்தவில்லையா? தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் தேசிய கொடியை ஏன் ஏற்ற முடியவில்லை? வேங்கை வயல் விவகாரத்தில் ஏன் இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை? ஸ்டாலின் இதற்கெல்லாம் உத்தரவாதம் தருவாரா?
பா.ஜ.க பற்றி தவறான பிம்பத்தை தி.மு.க. கட்டமைத்துள்ளது. 'ஜி' என்று சொன்னால் கெட்டவர்கள் என்பது போல் உருவாக்குகிறார்கள். 2024 தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் இது போன்ற தவறான கட்டமைப்பு சுக்குநூறாக உடைந்துபோகும்.
ஓட்டு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதி கொங்கு மண்டலம் யாருடையது என்பதை பார்த்து விடுவோம். பண அரசியல் என்ற பேயை கோவை தொகுதி மக்கள் விரட்டுவார்கள்; தமிழகத்திற்கே கோவை மக்கள் வழிகாட்டுவார்கள். வேப்பிலையோடு காத்திருக்கும் கோவை தொகுதி மக்கள் ஜூன் 4ஆம் தேதி பண அரசியல் பேயை ஓட்டிவிடுவார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் வரத்தான் போகிறது.
கோவையில் என்னை கண்காணிக்க சிறப்பு குழு உளவுத்துறை அமைத்திருக்கிறது. தமிழக உளவுத்துறை போலீசார் எனது செல்போனை ஒட்டு கேட்கின்றனர். என் மனைவி, என் சகோதரி, என் நண்பர்கள் செல்போனை ஒட்டு கேட்கின்றனர். அதனை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிடம் தகவல் சொல்கிறார் ஐ.ஜி. பின்னர் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு உளவுத் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.
தெலுங்கானாவில் செல்போனை ஒட்டுக்கேட்ட உளவுத்துறையினர் சிறையில் உள்ளனர். அங்கு உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்தவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்தபிறகு தமிழக உளவுத்துறை அதிகாரிகள் சிறை செல்வார்கள்.” என்று அண்ணாமலை கூறினார்.