எண்ணிலடங்கா நினைவுகளுடன் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்புவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 30ஆம் தேதி வெளிநாடு புறப்பட்டார்.
முதலில் ஜெர்மனி சென்ற முதலமைச்சர், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்கான பல்வேறு முதலீடுகள் ஈர்த்தார்.
அதன்பின் இங்கிலாந்து சென்ற அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கேயும் பல்வேறு நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 17,613 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
இந்தநிலையில் இங்கிலாந்தில் இருந்து இன்று புறப்பட்டு நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதுதொடர்பாக இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய TNRising பயணம், லண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது!
அளவில்லா அன்பை பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்.
இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட Tamil Diasporaவிற்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.