முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து ‘குளோஸ்’ செய்த ராகுல்! – முப்பெரும் விழாவில் முதல்வர் பேசியது என்ன?

எட்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்து பிரதமர் மோடி கட்டமைத்த பிம்பத்தை, ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து ‘குளோஸ்’ செய்துவிட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவை கொடிசியா மைதானத்தில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்கு தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றிக்கு வித்திட்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“கடந்த முறை இங்கே நான் கலந்துகொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் ‘டிரெண்ட்’ ஆனது. அதற்குக் காரணம், 8 முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை, ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து ‘குளோஸ்’ செய்துவிட்டார். ராகுலின் அந்த அன்பை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நம்முடைய எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது” என்று பேசியவர், வெற்றிக்கு கட்சியின் தொண்டர்கள்தான் காரணம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், “2004 கருத்துக்கணிப்புகளில், ஒன்றிய அளவில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.தான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று சொன்னார்கள். ஆனால், காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சியைப் பிடித்தது. இப்போதும் அதே மாதிரிதான், பாஜக 400 இடங்கள் வரை கைப்பற்றும் என்று சொன்னார்கள். ஆனால், அதை உடைத்து பா.ஜ.க.வால் தனித்து அரசு அமைக்க முடியாத நிலைமையை உருவாக்கியிருக்கிறோம்.” என்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தொடர் வெற்றியால் தனக்கு ஆணவம் ஏற்படவில்லை என்றும் மாறாக நம்பிக்கையையும் உற்சாகத்தையுமே கொடுப்பதாக கூறினார்.

இந்த விழாவில் தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த 40 நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com