
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், சில புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அவருடைய பேச்சு விவரம்:
”முதல் அறிவிப்பு:
‘கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்' கீழ் ஏற்கெனவே 2 இலட்சம் வீடுகள் உருவாகும் நிலையில் மேலும் புதிதாக, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 இலட்சம் வீடுகள் கட்டப்படும்.
இரண்டாவது அறிவிப்பு:
கிராமப்புறப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குகின்ற ஊரகச் சாலைகளை மேம்படுத்துகிற ‘முதல்வரின் கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்' கீழ், 8 ஆயிரத்து 911 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 ஆயிரத்து 484 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புறச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிதாக, ஆயிரத்து 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2,200 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.
மூன்றாவது அறிவிப்பு:
ஏழை மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பாதுகாக்கும் ‘சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்' கீழ், ஏற்கனவே 33 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற, திருமணமாகாத பெண்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்' கீழ் அளித்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாக 1 இலட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கான விழா வரும் 4-02-2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
4ஆவது அறிவிப்பு:
சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 200 ரூபாயாகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 100 ரூபாயும் வழங்கப்படும்.
மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் மேற்கூறிய பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்குச் செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இந்த அறிவிப்புகள் மூலம் தற்போதுள்ள சிறப்புக் காலமுறை ஊதியப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும், இத்தகைய பணியிடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள்.
5ஆவது அறிவிப்பு:
அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளில் ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை காலமான மே மாதத்தில் ஏற்கனவே அவர்கள் கோரிய ஊதியம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.
"உங்களால் நிறைவேற்ற முடியாதென்று" சவால் விடப்பட்ட வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றிக்காட்டியிருக்கின்றோம்.
"இவர்கள் செய்யவேமாட்டார்கள்" என்று சொல்லப்பட்ட வாக்குறுதிகளையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் எப்போது வளரும் என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுடைய வாட்டத்தைப் போக்குவதற்கு அனைத்துத் துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சியை அடைந்திருக்கின்றோம்.
பெரிய நகரங்களுக்கு மட்டும்தான் தொழிற்சாலைகளா? பாலங்களா? சாலைகளா? நூலகங்களா? கல்லூரிகளா? உள்கட்டமைப்பு வசதிகளா? என்று சலிப்புடன் கேட்டதை மாற்றி, அனைத்துப் பகுதிகளுக்கும், அனைத்து மாவட்டங்களுக்கும் அனைத்தையும் கொண்டு சென்றிருக்கின்றோம்.
இவை அனைத்திலும் சமூகநீதியை, சமநீதியை நிலைநாட்டியிருக்கின்றோம். இவையனைத்தும் என்னால்தான் ஆனதென்று கர்வம் கொள்பவன் அல்ல நான். மூத்த அமைச்சர்கள், நம்முடைய துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையின் பங்களிப்பு இல்லாமல் இதைச் செயல்படுத்தியிருக்க முடியாது. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கிய இங்கே இருக்கின்ற இத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் சாதனைகள் இல்லை. அது மட்டுமல்ல, தலைமைச் செயலாளர் தொடங்கி காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகள், அனைத்து நிலைகளிலும் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வரை அனைவரின் பங்களிப்பும் இதில் இருக்கிறது.
தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதருக்கும் அனைத்துத் திட்டங்களும் சென்று சேருவதை உறுதி செய்கின்றோம். ‘ஊர் கூடித் தேர் இழுப்பதென்று’ சொல்வார்களே, அதைப்போல அரசின் ஒவ்வொரு அணுவும் மக்களுக்காக செயல்படுவதால்தான் இது சாத்தியமாயிற்று.
எனக்கு உயிரும் உணர்வுமாக இருந்து, என்னை இயக்கிக் கொண்டிருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள்தான். எனக்கு மனவலிமை கொடுப்பதும், அனைத்து வகையிலும் தோள் கொடுப்பதும் எங்களோட தோழமைக் கட்சிகள்தான்!
ஜனநாயகத்தின் ஒரு பக்கம் ஆளும்கட்சியென்றால் இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள். மக்கள் மன்றத்தில் தேவையற்ற பல விமர்சனங்களை வைத்தாலும் இந்தச் சட்டமன்றத்தில் சில ஆலோசனைகளையும் வைத்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கனிவான நேரத்தில் கனிவாகவும், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தும், ஆசிரியராகவே செயல்பட்ட மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும், மாண்புமிகு துணைத் தலைவர், பேரவைச் செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது 17 உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். 5 உறுப்பினர்கள், 58 திருத்தங்களை வழங்கியிருக்கின்றார்கள். இந்த அரசுக்கு உதவுகின்ற வகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல, சில கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார்கள்.
அவையனைத்தும் அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய ஆலோசனைகளைக் கருத்தில்கொண்டு, அவற்றில் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உறுதியாக நிறைவேற்றித் தரும். எனவே, இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு மாண்புமிகு உறுப்பினர்கள் தங்களுடைய திருத்தங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் இந்த ஐந்தாண்டு காலத்தில் எனக்கும், என் மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்டு தினந்தோறும் திட்டங்களைத் தீட்டி உழைத்திருக்கின்றேன். இன்னும் உழைக்கக் காத்திருக்கின்றேன். இந்த 5 ஆண்டுகால உழைப்பையும் வளர்ச்சியையும் பார்த்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
எனக்கு, என்னைவிட தமிழ்நாட்டு மக்கள் மேல் கூடுதலான நம்பிக்கை இருக்கிறது. உறுதியாகச் சொல்கிறேன். நாங்கள்தான் மீண்டும் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்!” என்று ஸ்டாலின் பேசினார்.