பூங்கா தயார், நீங்க தயாரா? ...அழைக்கிறது கிண்டி சிறுவர் பூங்கா!
தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரையை அடுத்து சிறுவர்களைக் கூட்டிச்செல்லக்கூடிய இடங்களில் முக்கியமான ஒன்று, கிண்டி சிறுவர் பூங்கா. பல ஆண்டுகளாக சரிவரப் பராமரிக்கப்படாமலும், பார்வையாளர்களுக்கு உரிய வசதிகள் போதாமையும் இருந்துவந்தது.
ஆண்டுதோறும் 7 முதல் 8 லட்சம் பார்வையாளர்கள் வரக்கூடிய இந்தப் பூங்காவில், இளம் வயதிலிருந்தே வனம் மற்றும் வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும்வகையில் 30 கோடி ரூபாயில் இயற்கைப் பூங்காவாக மாற்றியமைக்கப்படும் என 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில் திறந்துவைத்தார்.
இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தையும் திறந்துவைத்ததுடன், பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளையும் அவர் ஜீப்பில் சென்று பார்வையிட்டார்.