சென்னை, தேனாம்பேட்டையில் இன்று காலையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், ஒரு பேட்டியில் நிர்மலா சீதாராமன் கோயில் சொத்துகளைக் கொள்ளையடிப்பதாகப் பேசியுள்ளார்; அவருக்கு அமைச்சர் சேகர்பாபு நன்றாகவே பதில் அளித்துள்ளார்; அதனால் மேற்கொண்டு தான் எதுவும் கூறப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.
”தி.மு.க.வின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்கமுடியாமல் தவறான பிரச்சாரங்களை, தேவையற்ற பிரச்சாரங்களை பொய் செய்திகளை ஊடகங்களை, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இன்று மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் குழப்பட்டும்; அண்ணாமலை போன்றவர்கள் எல்லாம் குழப்பினால் கவலைப்பட மாட்டேன். ஒன்றியத்திலே இருக்கிற அமைச்சர் மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் இரு நாள்களுக்கு முன்னர் கோயிலை நாம் கொள்ளையடிப்பதாகச் சொல்லியிருக்கிறார். இதுவரை 5,500 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் இடங்கள், சொத்துகள் மீட்கப்பட்டிருக்கின்றன... காரணம், தி.மு.க.ஆட்சிதான். உள்ளபடியே அவர்களுக்கு பக்தி இருந்தால் தி.மு.க. ஆட்சியைப் பாராட்டவேண்டும். பக்தி இல்லை, அது பகல் வேஷம். மக்களை ஏமாற்றுவதற்காக பகல் வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.” என்றும் ஸ்டாலின் பேசினார்.
மேலும், ”முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர், இந்துக்களின் வாக்குகள் நமக்குத் தேவையில்லை; அவை இல்லாமல் நாம் வெற்றிபெற்றுவிடுவோமென நான் பேசியதாக தன் அதிகாரபூர்வ வாட்சாப்பில் ஒரு செய்தி போட்டிருக்கிறார். நான் வழக்கு போட்டிருக்கிறேன். இப்படி திட்டமிட்டு இன்று வளர்ந்துகொண்டிருக்கிற திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்தவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வரக்கூடிய தேர்தலை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.” என்றும் ஸ்டாலின் பேசினார்.