நீங்கதான் வினேஷ் சாம்பியன் - முதல்வர் ஸ்டாலினும் பாராட்டு!
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனைபடைத்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத், திடீரென கூடுதல் எடை உள்ளதாகத் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார். ஒலிம்பிக் குழுவின் இந்த முடிவு இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குடியரசுத்தலைவர் முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித்தலைவர் இராகுல் காந்தி உட்பட அகில இந்திய தலைவர்களும் வினேசுக்கு ஆறுதலாகக் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வினேசை ஊக்குவிக்கும்படியாகக் கருத்துக் கூறியுள்ளார்.
“வினேஷ், எந்த வகையில் பார்த்தாலும் நீங்கள்தான் உண்மையான வெற்றியாளர். உங்களுடைய உறுதிப்பாடு, வலிமை, இறுதிப் போட்டியை நோக்கிய பயணமானது பத்து இலட்சக்கணக்கான இந்திய பெண் பிள்ளைகளுக்கு ஆதர்சமாக அமைந்துள்ளது. சில கிராம் எடைக்காக தகுதியிழப்பு செய்யப்படுவதால் உங்கள் மனவுறுதியையும் சாதனைகளையும் குறைத்துவிட முடியாது. ஒரு பதக்கத்தை நீங்கள் தவறவிட்டபோதும், உங்கள் வியக்கத்தக்க மனவுறுதியால் ஒவ்வொருவரின் மனதையும் வென்று இருக்கிறீர்கள்.” என்று முதலமைச்சர் தன் சமூக ஊடகச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.