
காங்கிரஸ் கட்சிக்கு மற்றும் கூடுதல் தொகுதி ஒதுக்கப்பட்டது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பிய நிலையில், தோழமை கட்சிகள் எங்கள் வேதனையையும் புரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், தோழமைக் கட்சிகள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிரமத்திற்கு மத்தியிலும் காங்கிரஸிற்கு கூடுதல் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற கட்சிகளுக்குத் தர முடியாது என்று சொல்வது எந்த வித நியாயமும் இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இதற்கு விளக்கமளித்தார்.
அதில் “தோழமைக் கட்சிகள் தாராளமாகத் தங்களுடைய உரிமைகளைக் கேட்கலாம். முதலமைச்சருக்கு மனம் இருந்தால் கண்டிப்பாகக் கொடுப்பார். ஆனால், ‘காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டும் ஏன் கூடுதல் தொகுதிகள் கொடுத்தீர்கள்?’ என்று கேட்பவர்கள் எங்களின் வேதனையையும் புரிந்துகொள்ள வேண்டும்.
முன்பு 110 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், பின்னர் 63, 41 எனப் படிப்படியாகக் குறைந்து கடந்த முறை 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இவ்வளவு தூரம் நாங்கள் இறங்கி வந்திருப்பதை மற்ற கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த மண்ணையும், தமிழ்நாட்டு மக்களையும் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தற்போது எங்களுக்குக் கூடுதலாக 3 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை நாங்கள் முழு மனநிறைவோடு ஏற்றுக்கொண்டுள்ளோம். மற்ற தோழமைக் கட்சிகளும் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெறுவதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.