பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வனத்துறை சீரழிக்கிறது- அன்புமணி

Pallikarani marshland
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்
Published on: 

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதால், அங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரை உடைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 3 கி.மீ நீளத்திற்கு 6 அடி உயரத்தில் தடுப்புச் சுவரும், அதற்கு உட்புறத்தில் 2 கி.மீ நீளத்திற்கு நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகின்றன.

தடுப்புச் சுவர், நடைபாதை ஆகிய இரண்டுமே நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்தப் பகுதியிலும், சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளிலும் பெய்யும் மழையால் ஏற்படும் நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்குச் செல்லமுடியாமல் தேங்கி வெள்ளம் ஏற்படும். அத்தகைய பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க இந்தத் திட்டத்தைக் கைவிட்டு ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களைத் தகர்க்க வேண்டும்.

கடந்த 17-ஆம் தேதி சென்னையில் சில இடங்களில் 30 செ.மீ.க்கும் கூடுதலாக மழை பெய்த போதிலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை நீர் வடிந்து விட்டது.

ஆனால், பள்ளிக்கரணை, ஜல்லடியான் பேட்டை ஆகிய இடங்களில் பெய்த மழையால் தேங்கி நிற்கும் நீரை எந்திரங்கள் மூலம் சதுப்பு நிலத்தில் வடியச் செய்ய வனத்துறையினர் போராடி வரும் போதிலும் இப்போது வரை மழை நீர் முழுமையாக வடியவில்லை.

ஒரு நாள் பெய்த மழைக்கே பள்ளிக்கரணை, ஜல்லடியான் பேட்டை பகுதிகளில் இந்த அளவுக்கு மழை நீர் தேங்கி நிற்கிறது என்றால், வடகிழக்குப் பருவமழையின்போது தொடர்ச்சியாக சில நாள்கள் மழை பெய்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் வேளச்சேரி, பெரும்பாக்கம் உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் ஆபத்து இருப்பதை அரசு உணர வேண்டும்.

மழைநீரைச் சேகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்கிறார். புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்பு கட்டாயமாக ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற விதி இனி கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்துகிறது. ஆனால், இன்னொரு புறம் சென்னையின் மிகப்பெரிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச் சுவரைக் கட்டி வனத்துறை சீரழிக்கிறது. இது என்ன முரண்பாடு?

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். அதை ஆக்கிரமிக்க அனுமதிப்பது மட்டுமின்றி, அதன் இயல்பைக் கெடுக்கும் வகையிலான திட்டங்களைச் செயல்படுத்துவதும் குற்றம்தான்.

எனவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவர், நடைபாதைப் பணிகளை நிறுத்தி, ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள கட்டுமானங்களை இடித்து அகற்ற வேண்டும். இந்தத் திட்டம் என்ன நோக்கத்திற்காக உருவாக்கி செயல்படுத்தப்பட்டது, அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்." என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com