“தொடர்ந்து படியுங்கள்… துணையாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தொடர்ந்து படியுங்கள்… துணையாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்” என பேசினார்.

தமிழ்நாடு அரசு கல்வித் துறையில் செய்த சாதனைகளைக் கொண்டாடும் வகையில், 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற பெயரிலான விழா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கட்டணமில்லா பேருந்து திட்டத்தை தெலுங்கானா மாநிலத்தில் மகாலட்சுமி திட்டம் என அங்கு செயல்படுத்திவருகிறார் அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி. அதேபோல், அம்மாநில சிறப்பு திட்டத்தை நாமும் இங்கு செயல்படுத்துவோம்.

மாணவர்கள் முன்னேறினால், குடும்பமும், அடுத்த தலைமுறையும் முன்னேறும். ஒரு வேளை உணவு தருவதாலும், மாதம் ரூ. 1000 தருவதாலும் என்ன பெரிய மாற்றம் வந்துவிடும் என சிலர் நினைக்கலாம். காலை உணவுத் திட்டம் அறிமுகமானதில் இருந்து மாணவர் வருகை அதிகரித்துள்ளது. புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டத்தினால், 12 ஆம் வகுப்பு முடித்த 77% மாணவர்கள் உயர்கல்வியில் சேருகிறார்கள். குறிப்பாக பெண்கள் உயர்கல்வியில் சேர்வதில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இன்று கல்வியில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சியை இந்தியாவின் பல மாநிலங்கள் திரும்பி பார்க்கின்றன. திட்டங்களை அவர்களது மாநிலத்தில் செயல்படுத்த ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை பொறுத்துகொள்ள முடியாமல் தான் அதற்கு தடை ஏற்படுத்தலாம் என ஒன்றியத்தில் நினைக்கிறார்கள். அவர்களுக்கு பயத்தை வரவழிக்க வேண்டும். அது நிச்சயம் நமது திட்டங்களாலும், உங்களின் சாதனைகளாலும் அது நடக்கும். அனைவருக்கும் கல்வி, உயர்தரக்கல்வி, எந்தக் காரணத்தினாலும் கல்வி நிலையத்திற்குள் ஒருவர் வராமல் இருக்கக் கூடாது என்பது தான் எனது இலக்கு.

நம் அரசு உருவாக்கி தரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் உயர உயர பறக்கவேண்டும். அதனை பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். இன்று அதனை பலர் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

உலகம் மிகவும் பெரிது. அதனால், இளநிலை மட்டுமின்றி, முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு என தொடர்ந்து மேலே படிக்க வேண்டும். உங்கள் படிப்புக்கு துணையாக வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். கல்வியில் சிறந்த தமிழ்நாடு; கல்வியில் உயர்ந்த தமிழ்நாடாக மாற வேண்டும். மாறும் அதனை நிச்சயமாக மாற்றுவோம்” என பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com