மதம்மாறிய இஸ்லாமியர் தீர்ப்பு- விரைவில் அப்பீலுக்கு சிபிஎம் அழுத்தம்!

P.Shanmugam, State secretary, CPI(M)
பெ.சண்முகம், சிபிஎம் மாநிலச் செயலாளர்
Published on

சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோரைக் கொண்ட மதுரை அமர்வு ஜூன் 25 அன்று இஸ்லாமிய பிற்படுத்தப்பட்டோர் சம்பந்தமாக வழங்கி உள்ள தீர்ப்பு இந்தியச் சமூகத்தின் யதார்த்தங்களைப் புறக்கணிப்பதாகவும், மதம் மாறிய எளிய ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் நலன்களுக்கு பாதகம் உருவாக்குவதாகவும் அமைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

” இஸ்லாமிய மக்களின் எளிய ஒடுக்கப்பட்ட பிரிவினர் மத்தியில் இருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை 09.03.2024 அன்று வெளியிட்டு இருந்த அரசாணை செல்லாது என மேற்கண்ட தீர்ப்பு கூறியுள்ளது. இந்த அரசாணையின்படி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், பட்டியல் சாதிகளை சேர்ந்தவர்களாக இருந்து மதம் மாறிய இஸ்லாமியர்கள் அனைவரும் 2007 தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பு இஸ்லாமியர்கள் (தனியார் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்புகள் இட ஒதுக்கீடு) சட்டம் 2007 இன் அடிப்படையில் வழங்கப்பட்ட 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை பெறத் தகுதி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டது. இத்தகைய சான்றிதழ் தனக்கு வழங்கப்படவில்லை என்று சமீர் அகமது (எதிர்) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழக்கில் மேற்கண்ட அரசாணையே செல்லாது என்று தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

"மதமாற்றங்களை ஏற்படுத்துவதற்காக இத்தகைய நிலைப்பாட்டை எடுத்த பிறகு, இஸ்லாமிலும் சமூகப் படிநிலைகள் உள்ளன என்று தற்போது கூறுவது நேர்மையற்றதாகும்" என்ற நீதிமன்றத்தின் கருத்து வழக்கின் மைய அம்சத்தை மீறிய விமர்சனம் ஆகுமென கருதுகிறோம். மதம் மாறுவதும், மதப் பிரசாரம் செய்வதும் அரசியல் சாசனம் தந்துள்ள உரிமைகளாக இருக்கும் போது அவற்றின் மீது நோக்கம் கற்பிப்பது சரியல்ல. இன்னொன்று சமூகப் படிநிலைகள் கண்கூடாக இருக்கும் போது அதை மறுதலிப்பதும் நீதியல்ல.

இந்த அரசாணை "இசுலாமியக் கோட்பாடுகளுக்கே முரணானது... ஒருவர் இசுலாமிய மதத்திற்கு மாறி விட்டார் எனில் அவர் வெறும் இசுலாமியர் மட்டுமே" என்றெல்லாம் நீதிமன்றம் கூறுகிறது. ஒருவர் மதம் மாறியவுடனேயே ஏற்கெனவே அனுபவித்து வரும் சமூக, பொருளாதார ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற்று விடுகிறார் என்ற அணுகுமுறை இயந்திர கதியானது. மதம் மாறிய பின்னரும் சாதி துரத்துகிறது என்பது இந்திய யதார்த்தம். குறிப்பிட்ட மதம் பேசுகிற சமத்துவம் அதன் இலக்காக இருக்கலாம், ஆனால், அதைப் பின்பற்றுகிற எல்லோருக்கும் சமத்துவம் கைவசமாகிறது என்ற அனுமானத்தில் அரசின் தலையீடுகள், நிவாரணங்கள் இருக்க இயலாது. மேலும் தமிழ்நாடு பிற்பட்டோர் ஆணையத்தால் பரிசீலிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் அடிப்படையிலேயே அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது என்பதும், பிற்பட்டோர் பட்டியல் பற்றி தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதைப் பயன்படுத்தி முறையாகவே அது வெளியிடப்பட்டும் இருக்கிறது என்பது முக்கியமானது.

ஆகவே, இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து, ஏற்கெனவே உள்ள அரசாணை அடிப்படையில் இசுலாமிய மதத்திற்கு மாறிய பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, சீர்மரபினர், பட்டியல் சாதியினர் நலன்களை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும்.” என்று பெ. சண்முகம் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com