மத்திய அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகு தமிழ்நாட்டில் சமூகநீதி ஆய்வை நடத்துவதென்றும் இதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய ஆணையம் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
“ தமிழ்நாட்டில் பா.ஜ.க. தவிர அனைத்துக் கட்சிகளும் இக்கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. இந்தப் பின்னணியில் தமிழ்நாடு அமைச்சரவையின் இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
அதே சமயம், இதன் ஆய்வு வரம்புகள் உட்பட்ட முழுமையான விபரங்கள் வெளியிடப்படுவது அவசியம் என்று சிபிஐ(எம்) வலியுறுத்துகிறது. இதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமெனில் ஆணையம் தன் பணியைத் தொடங்குவதற்கு முன்பே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனைகளைப் பெற்றால் சமூக, பொருளாதார நிலைமைகளை முழுமையாக வெளிக்கொணரவும், அதனடிப்படையில் சமூக - பொருளியல் நீதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும். எனவே, இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு நடத்த வேண்டும்.” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.