பட்டாசு விபத்து நிகழ்ந்த செங்கமலப்பட்டி, விருதுநகர் மாவட்டம்
பட்டாசு விபத்து நிகழ்ந்த செங்கமலப்பட்டி, விருதுநகர் மாவட்டம்

அடுத்தடுத்து பட்டாசு ஆலை வெடிப்புகள்- உயர்மட்ட விசாரணை கேட்கிறார் பாலகி.!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 பேர் பலியான நிலையில், தொடர் விபத்துக்கள், உயிரிழப்புகள் குறித்து உயர்மட்டக்குழு அமைத்து விசாரணைக்கு
உத்தரவிட சிபிஐ (எம்) கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் மாநிலச் செயலாளர், கே. பாலகிருஷ்ணன் இதுகுறித்து இன்று மாலையில் வெளியிட்ட அறிக்கை விவரம்: 

” விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஆறு பெண்கள் உட்பட 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதும் மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து சம்பவங்கள் நடப்பதும், ஏழைத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் பட்டாசு விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த துயரத்திலிருந்து மீள்வதற்குள் அடுத்த விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் வேதனையாகும். பட்டாசு ஆலை நிறுவனங்கள் உரிய விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றாததும், அதனை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கத் தவறுவதுமே இதுபோன்ற விபத்துக்களுக்கு முக்கிய காரணமாகும்.

எனவே, பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தொடர் விபத்துக்கள் குறித்தும், இதனால் ஏற்பட்டுள்ள மனித உயிரிழப்புகள் குறித்தும் உயர்மட்டக்குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். பட்டாசு ஆலைகளில் நியாயமான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீதும், விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறும் ஆலை நிர்வாகங்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிடவும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தரமான உயர் சிகிச்சையும்,  உரிய இழப்பீடும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பாலகிருஷ்ணன் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com