போதை கும்பலால் பள்ளி மாணவனும் அடித்துக் கொலை; அச்சம் தருகிறது : பெ.சண்முகம்

 சிபிஐஎம் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர்
சிபிஐஎம் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர்
Published on

               திருவொற்றியூரில் அரசுப்பள்ளியில் போதைப் பொருள் உட்கொண்டதை தட்டிக்கேட்ட மாணவர்களில் தனுஷ் (வயது 17) என்ற +2 மாணவனை அதே பள்ளியைச் சார்ந்த  மாணவர்கள் கும்பலாக சேர்ந்துகொண்டு கொடூரமாக தாக்கியதில் மாணவன் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த கொடூரமான படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

               படுகொலை செய்யப்பட்டுள்ள மாணவரின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

               திருவொற்றியூர் வசந்தா நகர் 1வது தெருவில் வசிக்கும் பட்டியலின வகுப்பைச் சார்ந்த மாணவன் தனுஷ் அப்பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்தார். வழக்கம் போல ஆகஸ்ட் 12 அன்று பள்ளிக்குச் சென்ற போது, ஆசிரியர் பள்ளியில் மேல்மாடியில் உள்ள அறையிலிருந்து நோட் புத்தகம் எடுத்து வரச் சொல்லியுள்ளார். மாணவன் தனுஷ் மற்றும் அவருடன் மற்றொரு மாணவனும் மேல்மாடிக்குச் சென்றுள்ளனர். அங்கு கஞ்சா போதையில் இருந்த சில மாணவர்கள்  புகையை மாணவர்கள் மீது ஊதியுள்ளனர். இதை தனுசுடன் சென்ற மாணவர் தட்டிக் கேட்டுள்ளார். இருவரும் ஆசிரியரிடமும் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களும் சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டித்துள்ளனர்.

               இதை மனதில் வைத்துக் கொண்டு பள்ளியில் போதைப்பொருளை உட்கொண்ட  மாணவர்கள் மற்றும் சிலர் கும்பலாக ஒன்றுசேர்ந்து ஆகஸ்ட் 14, 2026 அன்று மாணவன் தனுஷை கடுமையாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தனுஷ் உயிரிழந்துள்ளார். இதுவரை 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மூன்று பேர் மட்டுமே 18 வயதுடையவர்கள், மற்றவர்கள் 17 வயதுடையவர்கள்.

               சமீபத்தில், கோவை, தனியார் கல்லூரியில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கத்தின் காரணமாக கல்லூரி மாணவன் கும்பல் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இன்னும் மக்கள் மனதிலிருந்து நீங்காத நிலையில், தற்போது திருவொற்றியூரில் பள்ளி மாணவர் போதைப் பொருளினால் கும்பல் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

               இப்படுகொலை போதைப் பொருளினால் ஏற்பட்டுள்ள கொலை என வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று கோரி பெற்றோர்கள் தங்களது மகனின் உடலை வாங்க மறுத்து போராடி வருகின்றனர்.

               எனவே, இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும், மகனை பறி கொடுத்துவிட்டு தவிக்கும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று உரிய முறையில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனவும், மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், விடுதிகள் உள்ளிட்டு சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டுமெனவும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளையும் அதற்கு உடந்தையாக உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

(பெ. சண்முகம்)

logo
Andhimazhai
www.andhimazhai.com