காங்கிரஸ் கட்சிய விளாசிய திமுக எம்.எல்.ஏ. – மீண்டும் கூட்டணிக்குள் மோதல்!

திமுக - காங்கிரஸ்
திமுக - காங்கிரஸ்
Published on

ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சித்துப் பேசிய மதுரை வடக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ. கோ. தளபதி மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் போர்கொடி தூக்கியுள்ளனர்.

மதுரையில் நடைபெற்ற மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாளில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தளபதி, “மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் எம்பி ஆகிவிட்ட நிலையில் தற்போது ஆட்சியில் பங்கு வேண்டும் கேட்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் இனி சீட்டே கொடுக்கக் கூடாது. தலைமை புரிந்துகொள்ள வேண்டும்” என பேசியிருந்தார்.

இதற்கு நேற்று ஜோதிமணி எம்.பி. பதிலடி கொடுத்திருந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி அவர்கள் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

மொழி, சமூக நீதி, ஜனநாயக உரிமைகளுக்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவை போற்ற வேண்டிய மேடையில், கூட்டணி கட்சியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய கோ.தளபதி அவர்களின் பேச்சு தேவையற்றதும், கண்டிக்கத்தக்கதுமானதும் ஆகும்.

காங்கிரஸ் பேரியக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் வலுவான அமைப்புடன் செயல்பட்டு வருகிறது. 100% பூத் கமிட்டி அமைக்கும் பணி நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது; 85% கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அமைப்பு சீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கிராம சபை தொடர்பான பணிகள் மூலம், மக்களின் உரிமை, மரியாதை, வாழ்வாதாரம் குறித்த போராட்டத்தை காங்கிரஸ் பேரியக்கம் நேரடியாக மக்களிடையே கொண்டு சென்று வருகிறது.

கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, பொது மேடையில் காங்கிரஸ் பேரியக்கத்தையும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி அவர்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார்: ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்பதுபோல் காங்கிரஸ் கட்சியை தாக்குவது பொறுப்பற்ற அரசியல்; அடுத்த கட்சிகளின் சீட்டு விவகாரங்களில் தலையிடுவது அரசியல் நாகரிகமல்ல.

மதவாத பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கும் இடையிலான நல்ல நட்புக்கும், ‘இந்தியா’ கூட்டணியின் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்களை யாரும் மேற்கொள்ளக் கூடாது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பிக்களான திரு. மாணிக் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோரைக் குறித்து பேசப்பட்ட கருத்துகளுக்கு கோ. தளபதி MLA அவர்கள் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இது திமுக – காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான மோதலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com