அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று காலை முதல் பிரச்சாரம் செய்துவருகிறார்.
திருவல்லிக்கேணியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, வாகனத்தில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசினார்.
அந்த பேட்டி:
உங்களை துணை முதலமைச்சர் உதயநிதி தொடர்ந்து விமர்சித்து வருகிறாரே?
அவருக்குப் பேசுவதற்கு வேறு ஒன்றும் இல்லை, அரசியல் ரீதியாகப் பேசினால் பதில் சொல்லலாம். திட்டமிட்டு தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் அதற்கு தகுந்த பதிலடியை நாங்களும் கொடுப்போம்.
தி.மு.க. கோட்டை சென்னை என்று சொல்கிறார்கள், இதில் அ.தி.மு.க. வெற்றி பெறுமா?
நீங்களும், அவர்களும்தான் அப்படிச் சொல்கிறீர்கள். இனி சென்னை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாறும்.
தலைமைச்செயலாளர் போன்ற அதிகாரிகளை மாற்றியதற்கு முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தலைமைச்செயலாளரோ டி.ஜி.பி.யோ மாற்றப்படவில்லை என்று விமர்சித்து இருக்கிறார்?
ஏன்… 5 ஆண்டுகள் காவடி தூக்கிக்கொண்டு இருந்தார்கள், அவர்களே இருக்க வேண்டுமா..? அவர்கள்(தி.மு.க.) அதிகாரிகளை நம்பித்தான் இருக்கிறார்கள், மக்களை நம்பி இல்லை. நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் விரும்புகிறார்கள். அந்த அடிப்படையில் மாற்றுகிறார்கள். அதில் இவர்களுக்கு என்ன கஷ்டம்.? யார் வந்தால் இவர்களுக்கு என்ன..?
நமக்கு மக்கள்தான் முக்கியம். மக்கள்தான் ஓட்டு போடுகிறார்கள். அதன் அடிப்படையில் யார் அதிகாரிகள் என்று அ.தி.மு.க. பார்ப்பதில்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்தது அந்த அதிகாரிகள்தானே? அவர்கள் தி.மு.க. அரசுக்கு கூஜா தூக்கிக்கொண்டு இருந்தார்கள். மக்கள், அரசியல் கட்சி தலைவர்களிடம் எதிர்ப்பு தேர்தல் அதிகாரிகளுக்கு போய் இருக்கிறது. அந்த அடிப்படையில் நடுநிலையோடு தேர்தல் நடத்த வேண்டும் என நினைத்து தான் இந்த மாற்றம் நடந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.