புலம்பாதீங்க... என் வெளிநாட்டுப் பயணங்கள் தொடரும்! - ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on

சிலரால் என்னுடைய வெளிநாட்டு பயணத்தை பொறுத்தக் கொள்ள முடியாமல் புலம்பி இருக்கிறார்கள். எனது வெளிநாட்டு பயணங்கள் தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். மேலும், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டையும் நடத்தினார். இந்த பயணத்தின்போது தமிழகத்திற்கு மொத்தம் ரூ. 15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “ஒருவாரகாலமாக ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நான் மேற்கொண்டேன். மனநிறைவோடு தமிழகம் திரும்பியுள்ளேன். இந்த பயணம் மாபெரும் வெற்றிப்பயணமாக அமைந்துள்ளது. மொத்தம் ரூ. 15 ஆயிரத்து 516 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

தமிழகம் மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. ஏற்கனவே உள்ள 17 நிறுவனங்களும் மற்ற மாநிலங்களை நோக்கி செல்லாமல் தமிழ்நாட்டிலேயே தொழிலை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன. மிக அதிக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தை நோக்கி நிறைய முதலீடுகளை கொண்டு வர முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். முதலீடுகளை தாண்டி நல்லுறவுக்காக ஒன்று கூடிய தருணமாக இந்த பயணம் அமைந்தது. தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும்.

கடந்த நான்கு ஆண்டு வெளிநாட்டு பயணத்தை விட, இந்த பயணத்தில்தான் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

அதேபோல், ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திரு உருவப்படத்தை திறந்து வைத்ததுதான் இதில் சிறப்பு.

சிலர் இந்த பயணத்தை பொறுத்தக் கொள்ள முடியாமல் புலம்பி இருக்கிறார்கள். எனது வெளிநாட்டு பயணங்கள் தொடரும்.” என்றவரிடம், செங்கோட்டையன் பதவி பறிப்பு குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, "ஆக்கப்பூர்வமான கருத்துகளை பேசும்போது அக்கப்போரான கேள்விகளை கேக்குறீங்களே" என்று பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து, பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில், “நாங்கள் மெளனப் புரட்சி செய்து கொண்டிருக்கிறோம். மத்திய அரசு எவ்வளவுதான் புறக்கணித்தாலும் முதலிடத்தில் வந்து கொண்டிருக்கிறோம்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com