முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற குகேஷ்
முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற குகேஷ்

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற குகேஷ்… ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகை!

கேண்டிடேட் செஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயத்தை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கனடாவின் டொராண்டா நகரில் நடைபெற்ற கேண்டிடேட் செஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயத்தை முதலமைச்சர் வழங்கினார். இந்த சந்திப்பின்போது, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை அதிகாரிகள், குகேஷின் பெற்றோர் உடனிருந்தனர்.

ஏற்கெனவே இப்போட்டியில் பயிற்சி பெறுவதற்காக, தமிழக அரசின் சார்பில் 15 லட்சம் ரூபாய் குகேஷுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதல்வர் உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கான போட்டியிலும் அவர் வெற்றி வாகை சூடிட வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக,கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14ஆவது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான குகேஷ் அபார வெற்றி பெற்றார். மொத்தம் 9 புள்ளிகள் பெற்றுள்ள அவர் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி சாதனை படைத்தார்.

கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் இந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் தொடரில் மிக இளம் வயதில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் அவர் எட்டினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com