SIR வேண்டாம் என திமுக உச்சநீதிமன்றம் சென்றால்.. நாங்கள் வேண்டும் என செல்வோம் – ஜெயக்குமார்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்
Published on

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் வேண்டாம் என திமுக உச்சநீதிமன்றம் சென்றால் நாங்கள் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் வேண்டும் என செல்வோம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது: “முதல்வருக்கு எஸ்.ஐ.ஆர் என்றாலே அலர்ஜிதான்; மக்களை திசைதிருப்பவே எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது.

இறந்தவர்களுக்கு வாக்குரிமை இருந்து, இருப்பவர்களுக்கு வாக்குரிமை இல்லாதது ஜனநாயக கேலிக்கூத்து. அதை மாற்றுவதற்காகவே எஸ்.ஐ.ஆரை நாங்கள் வரவேற்கிறோம். அதிமுகவைப் பொறுத்தவரை கண்மூடித்தனமாக ஒரு திட்டத்தை ஆதரிக்க மாட்டோம். திமுக ஏன் எஸ்.ஐ.ஆரை கண்டு பயப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நல்ல விஷயம்.

‘எஸ்.ஐ.ஆர்’ வேண்டாம் என திமுக உச்சநீதிமன்றம் சென்றால், நாங்கள் ‘எஸ்.ஐ.ஆர்.’ வேண்டும் என செல்வோம். கள்ள வாக்குகளை நம்பிதான் திமுக உள்ளது. அதற்கு அப்பு வைக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்ததும் திமுக கொதிக்கிறது.

செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். அவர் பேசிய பிறகு, நான் அதைப் பற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.

திமுகவைப் பொறுத்தவரை வேறுபாடு காட்டுவார்கள். அதில் மாறுபட்ட கருத்தே இல்லை. நாங்கள் சாதி, மதம், இனம் ரீதியில் வேறுபாடு காட்ட மாட்டோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நாங்கள் கடைப்பிடிப்போம்” என்றார்.

பின்னர், அதிமுக - தவெக கூட்டணி குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, “தேர்தலுக்கு இன்னும் 5 அமாவாசை தான் இருக்கிறது. அதுவரை மட்டுமே திமுகவால் ஆட முடியும். 2 அமாவாசைக்கு முன்பு அரசியலில் மாற்றங்கள் வரலாம். கூட்டணி குறித்து இப்போது பேசமுடியாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com