
ஜன நாயகன் திரைப்படத்திற்கான தணிக்கைத் தீர்ப்பை ஜன. 9 அன்று வழங்குவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரம் தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
வழக்கின் விசாரணை இன்று தொடங்கியதும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா, “ஒரு திரைப்படத்திற்கு யு / ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்தபின் ஏன் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும்?” எனத் தணிக்கை வாரியத்திடம் கேட்டார்.
அதற்கு, தணிக்கை வாரியத் தரப்பு, “ஒரு திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுத்த பின்பும் வழக்கு தொடுக்கலாம். இப்படத்தில் பாதுகாப்புப் படையின் இலச்சினை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. தணிக்கை வாரியத்துக்கு திருப்தி இல்லாததாலே மறுஆய்வுக்கு உட்படுத்துகிறோம்.
மறு ஆய்வு குறித்து தயாரிப்பு தரப்பிடம் கடந்த ஜன. 5 ஆம் தேதியே கூறிவிட்டோம். மறுதணிக்கைக்கு அமைக்கப்பட்ட குழுவின் புதிய உறுப்பினர்களும் படத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இதற்கு 4 வாரங்கள் அவகாசம் வேண்டும்” எனக் கூறியது.
மேலும், படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து, “ஜன நாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் பெற டிச. 16 ஆம் தேதி விண்ணப்பித்திருந்தோம். ஆனால், கால தாமதமாகவே படம் பார்க்கப்பட்டது. இருந்தும், பெரும்பான்மை உறுப்பினர்கள் யு/ஏ சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டனர். ஆனால், ஒரே ஒரு உறுப்பினர் உடன்பாடு இல்லையென்பதால் மறு ஆய்வு செய்யக் கோரிக்கை வைப்பது நியாயமா? இப்படம் ரூ. 500 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்டுள்ளது. ஜன. 9 ஆம் தேதி வெளியாகும் என உரக்கக் கூறிவிட்டோம். திடீரென மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்த அவகாசம் கேட்டால் எப்படி?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படம் வெளியாவது குறித்து ஜன. 9 ஆம் தேதி காலையில் தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
அன்றே திரைப்படமும் வெளியாகவுள்ளதால் முதல் காட்சியான காலை 9 மணிக்கு இப்படம் வெளியாகாது என்றே தெரிகிறது.