மக்களவை விவகாரம்: டி.ஆர். பாலு, எல்.முருகன் விளக்கம்!

மக்களவை விவகாரம்: டி.ஆர். பாலு, எல்.முருகன் விளக்கம்!

மக்களவையில் என்ன நடந்தது என்பது குறித்து தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலுவும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் விளக்கம் அளித்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று வெள்ள நிவாரணம் தொடர்பாக தி.மு.க. எம்.பி.கள் கேள்வி எழுப்பியபோது, அவர்களுக்கும் பா.ஜ.க. எம்.பி.களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

டி.ஆர்.பாலு அமைச்சர் எல்.முருகனை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக டி.ஆர். பாலு ஊடகங்களிடம் அளித்த விளக்கம்:

“கடந்த டிசம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 45 செ.மீ. மழை பெய்ததும், தூத்துக்குடி சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் 150 செ.மீ. மழை ஒரே நாளில் பெய்தது அனைவருக்கும் தெரியும். அதன் தீவிரத்தை பிரதமர் உணர்ந்த காரணத்தால்தான், இரண்டு மத்திய அமைச்சர்களைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பினார். அதேபோல், மூன்று மத்திய குழுக்கள் தமிழகத்த்துக்கு வந்து ஆய்வு சேதத்தைப் பார்வையிட்டது. இந்த மழை சேதத்தை பற்றி மக்களவையில் சொல்லிக் கொண்டிருந்தபோது, நம்முடைய அமைச்சர் முருகன் ஏதோ பேச ஆரம்பித்தார். ’என் கேள்விக்கு சம்மந்தப்பட்ட அமைச்சர் பதில் சொல்லட்டும், நீங்க ஏன் எழுறீங்க… உட்காருங்க’ என்று சொன்னேன். அவர் என்ன பேசினார் என்று என் காதில் விழவில்லை.

தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நிதி சரியாக கிடைக்கவில்லை, ஒன்றிய அரசு சரியாக நிதி உதவி செய்யவில்லை என தமிழர்கள் என்ற முறையில் நானும் ஆ.ராசாவும் கேள்வி கேட்டோம். ஆனால், தமிழர் என்ற முறையில் எல்.முருகன் சரியாக பதில் சொல்லவில்லை. எங்களுக்கு பதில் சொன்ன வேறு மாநில அமைச்சரும் ஒழுங்காக பதில் சொல்லவில்லை. ஆனால், நம் மாநிலத்துக்காரரான எல்.முருகன் குறுக்கிட்டுக் கெடுத்துக் கொண்டே இருந்தார். அதை நம் தோழர்கள் எழுந்து கேட்டார்கள். இதுதான் நடந்தது. முருகன் தமிழன் என்ற முறையில் இதைப் பத்தி கவலைப்படவில்லை. அவர்கள் வேறு ஒரு விஷயத்தை முன்வைத்தார்கள். கேள்வி கேட்டவரும் தலித் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். நான் உள்நோக்கத்தோடு பேசவில்லை. அவர்களை ஆதரித்துத்தான் பேசினேன். ஆனால், அவர் என் மீது பாய்கிறார் என்ன செய்ய முடியும்?.

மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் ஊடகங்களிடம் அளித்த விளக்கம்:

”சமூக நீதியில் தி.மு.க. விற்கு நம்பிக்கையில்லை. பட்டியலினத்து எம்.பி, அமைச்சர் ஆவதை தி.மு.க. விரும்பவில்லை. அவர்களுக்கு பட்டியலினத்தவரை அடிமைகளாகவும், வாக்கு செலுத்துபவர்களாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் கண்ணோட்டம். அந்த அடிப்படையில்தான் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார். எனக்கும் என் சமூகத்துக்குமான அவமரியாதையாகத்தான் இதைக் கருதுகிறேன்.”

மேலும், அமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “தி.மு.க.வின் போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பம் இன்று மக்களவையில் வெளிப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com