சென்னை அண்ணா நகரில் திருடுபோன சொகுசு கார் பாகிஸ்தான் மீட்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி அண்ணா நகரில் நிறுத்தப்பட்டிருந்த கார் மாயமானது. இதையடுத்து, காரின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த காரை கடத்திச் சென்றது சத்தேந்திர செகாவத் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கடந்த 20 வருடங்களாக கார் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், குறிப்பாக சொகுசு கார்களை குறிவைத்து திருடியதும் தெரியவந்தது. 150-க்கும் மேற்பட்ட கார்களை திருடி, வட இந்தியாவில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, திருடப்பட்ட காரை வட இந்தியாவில் போலீசார் தேடி வந்தனர். கடந்த 80 நாட்களுக்கும் மேலாக வடமாநிலங்களில் முகாமிட்டு, காரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஜெய்சல்மர் மாவட்டத்தில் காரை போலீசார் கண்டறிந்து பின்தொடர்ந்த போது, காரை விட்டுவிட்டு ஓட்டிச்சென்றவர்கள் தப்பி ஓடினர். இதையடுத்து, இந்த காரை மீட்டு போலீசார் சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்.
வண்டி திருடப்பட்டபோது 66 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடியிருந்ததாகவும் தற்போது 1 லட்சத்து 5 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடியிருப்பதாக வண்டியின் உரிமையாளர் கூறியுள்ளார்.